வாக்குச்சாவடி மையங்களுக்கு 944 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டன
கடலூர் மாவட்டத்தில் 715 வாக்குச்சாவடி மையங்களுக்கு 944 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டன.
கடலூர்,
கடலூர் மாவட்டத்தில் கடலூர் மாநகராட்சி, நெல்லிக்குப்பம், பண்ருட்டி, விருத்தாசலம், வடலூர், திட்டக்குடி, சிதம்பரம் ஆகிய 6 நகராட்சிகள், அண்ணாமலைநகர், கிள்ளை, காட்டுமன்னார்கோவில், பரங்கிப்பேட்டை, குறிஞ்சிப்பாடி, புவனகிரி, கங்கைகொண்டான், பெண்ணாடம், ஸ்ரீமுஷ்ணம், லால்பேட்டை, மங்கலம்பேட்டை, தொரப்பாடி, மேல்பட்டாம்பாக்கம், சேத்தியாத்தோப்பு ஆகிய 14 பேரூராட்சிகளுக்கான தேர்தல் இன்று (சனிக்கிழமை) நடக்கிறது.
இந்த தேர்தலையொட்டி 715 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அந்தந்த மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்களில் இருந்த பாதுகாப்பு அறையில் பூட்டி சீல் வைக்கப்பட்டு இருந்தது.
துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
இதன்படி 944 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டன. இது தவிர வாக்குச்சாவடிகளுக்கு தேவையான அழியாத மை, பேனா, பென்சில், குண்டூசி என பல்வேறு வகையான பொருட்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டன. அந்த பொருட்களையும், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களையும் தேர்தல் பணியில் ஈடுபடும் 5 ஆயிரம் அலுவலர்கள், நேற்று 3-ம் கட்ட பயிற்சி முடித்து, பணி ஆணை பெற்றவுடன் மண்டல அலுவலர்கள் தலைமையில் நேற்று அந்தந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு எடுத்து சென்றனர்.
அப்போது 57 நடமாடும் குழுவினர் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வேனில் எடுத்துச்சென்றனர். இந்த பொருட்கள் அனைத்தையும் வாக்குச்சாவடி மையங்களுக்கு கொண்டு சென்று, வாக்குப்பதிவு அலுவலர்கள் இரவு முழுவதும் அங்கேயே தங்கி கண்காணிப்பார்கள். இன்று (சனிக்கிழமை) காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி, மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும். கொரோனா நோயாளிகளுக்கு மாலை 5 முதல் 6 மணி வரை ஒதுக்கப்பட்டு உள்ளது. அதில் அவர்கள் வந்து வாக்களிப்பார்கள். வாக்கு எண்ணிக்கை வருகிற 22-ந்தேதி(செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.
மேலும் வாக்குச்சாவடி மையங்களில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிருமிநாசினி தெளிக்கும் பணி நேற்று நடைபெற்றது.