மடத்துக்குளத்தில் மக்காச்சோளம் கொள்முதல் மையம்
மடத்துக்குளத்தில் மக்காச்சோளம் கொள்முதல் மையம்
மடத்துக்குளதில் அரசு நேரடி மக்காச்சோள கொள்முதல் மையம் அமைக்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்காச்சோளம் சாகுபடி
மடத்துக்குளம் அமராவதி புதிய ஆயக்கட்டு பகுதியில் மக்காசோளம் முக்கிய சாகுபடியாக உள்ளது. அமராவதி அணையின் நீர் இருப்பை பயன்படுத்தி ஆண்டு தோறும் பலநூறு ஏக்கர் பரப்பில் நடவு மக்காச்சோளம் சாகுபடி செய்யப்படுகிறது. இதன் வாயிலாக ஆண்டுக்கு 2 ஆயிரம் டன் அளவில் மக்காச்சோளம் மடத்துக்குளம் பகுதிகளில் உற்பத்தி செய்யப்படுகிறது.
ஆனால் இதற்கு விவசாயிகள் எதிர்பார்க்கும் விலை கிடைப்பதில்லை. ஒவ்வொரு அறுவடையின் போதும் இந்த பிரச்சினை உள்ளது. சில மாதங்களுக்கு முன்பு பயிர் செய்யப்பட்ட மக்காச்சோளம் தற்போது பல இடங்களில் அறுவடை செய்யப்படுகிறது. இதற்கு எதிர்பார்த்த விலை இல்லை என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
நேரடி கொள்முதல்
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது
ஒரு ஏக்கர் சாகுபடி ரூ. 40 ஆயிரம் வரை செலவாகிறது. அறுவடையின்போது தொழிலாளர்கள் பற்றாக்குறை காரணமாக வெளியிடங்களில் இருந்து அழைத்து வருகிறோம். இதற்கு கூடுதலாக செலவாகிறது. தற்போது கொள்முதல் செய்யப்படும் விலையும் திருப்தியாக இல்லை. இதனால் விவசாயிகள் பல இடங்களில் நட்டம் அடைந்துள்ளனர். பல ஆண்டாக இந்த பிரச்சசினை தொடர்ந்து வருகிறது. இதற்கு நிரந்தரத்தீர்வாக நெல்லுக்கு நேரடி கொள்முதல் மையம் அமைப்பது போல, மக்காச்சோளத்திற்கும் நேரடி கொள் முதல் மையம் அமைக்க அரசு நட வடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.