இல்லம் தேடி கல்வித்திட்ட பணியை ஆய்வு செய்ய வந்த போலி அதிகாரி கைது
இல்லம் தேடி கல்வித்திட்ட பணியை ஆய்வு செய்ய வந்த போலி அதிகாரி கைது செய்யப்பட்டார்.
வேப்பந்தட்டை:
போலீசில் புகார்
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள நெய்க்குப்பை கிராமத்தைச் சேர்ந்தவர் உதயகுரு(வயது 24). இவர், பிம்பலூரில் இல்லம் தேடி கல்வித்திட்டத்தில் பணியாற்றி வரும் தன்னார்வலர்களிடம் சென்று, நீங்கள் செய்யும் பணியினை நான் ஆய்வு செய்ய வேண்டும். நீங்கள் செய்த பணி விவரங்களை என்னிடம் கொடுங்கள், என்று கூறியுள்ளார். மேலும் அவர் மனித உரிமை இன்டர்நேஷனல் அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றுவதாகவும் கூறியுள்ளார்.
அவர் மீது சந்தேகம் அடைந்த தன்னார்வலர்கள், இது பற்றி பிம்பலூர் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் புகழேந்திக்கு தகவல் தெரிவித்தனர். இது குறித்து புகழேந்தி வி.களத்தூர் போலீசில் புகார் செய்தார்.
போலி அடையாள அட்டைகள்
இதையடுத்து போலீசார் விரைந்து வந்து உதயகுருவை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் பல்வேறு போலி அடையாள அட்டைகள் வைத்திருந்ததும், அதனை வைத்து பல்வேறு இடங்களில் அதிகாரி என்று கூறி மிரட்டி வந்ததும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து உதயகுருவை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.