பிளஸ்-2 மாணவிக்கு பாலியல் தொல்லை; போக்சோ சட்டத்தில் ஆசிரியர் கைது

பிளஸ்-2 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-02-17 20:10 GMT
பட்டுக்கோட்டை:
பட்டுக்கோட்டை அருகே பிளஸ்-2 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
மாணவிக்கு பாலியல் தொல்லை
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா கீழக்குறிச்சி 28 நெம்மேலி கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார்(வயது 53). இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். 
தற்போது அந்த பள்ளியில் பனிரெண்டாம் வகுப்புக்கான திருப்புதல் தேர்வு நடந்து வருகிறது. நேற்று முன்தினம் காலை 10 மணியளவில் அந்த பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவர் திருப்புதல் தேர்வு எழுதிக்கொண்டு இருந்தார். அப்போது தேர்வு மையத்தில் பணியில் இருந்த ஆசிரியர் ராஜ்குமார், அந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
போலீசில் மாணவி புகார்
தன்னிடம் ஆசிரியர் வரம்பு மீறுவதை அறிந்த அந்த மாணவி ஆசிரியரை கண்டித்துள்ளார். ஆனாலும் ஆசிரியர் ராஜ்குமார் அதை பொருட்படுத்தாமல் தொடர்ந்து வரம்பு மீறி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதனால் மிகுந்த மன உளைச்சல் மற்றும் வேதனை அடைந்த அந்த மாணவி கண்ணீருடன் வகுப்பறையை விட்டு வெளியேறினார். வீட்டுக்கு சென்ற அவர் பள்ளியில் நடந்த சம்பவத்தை தனது பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். இதுகுறித்து அந்த மாணவியின் பெற்றோர் மதுக்கூர் போலீசில் புகார் செய்தனர். இந்த புகாரை மதுக்கூர் போலீசார், பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். 
ஆசிரியர் கைது
இதனையடுத்து இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) ஜெயா மதுக்கூருக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். விசாரணையில் மாணவிக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்ததன் அடிப்படையில்  ஆசிரியர் ராஜ்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து பட்டுக்கோட்டை போக்சோ கோர்ட்டில் ஆஜர் செய்தார். 
அவரை 15 நாள் காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டதை தொடர்ந்து ஆசிரியர் ராஜ்குமாரை போலீசார் தஞ்சை சிறையில் அடைத்தனர்.  பள்ளி ஆசிரியரே மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து கைதான சம்பவம் அந்த பள்ளியில் படிக்கும் மாணவிகளின் பெற்றோர்களிடையே மிகுந்த வேதனையை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்