மூதாட்டி அடித்துக் கொலை
விழுப்புரம் அருகே மூதாட்டியை அடித்துக் கொன்று உடலை செப்டிக்டேங்கில் வீசிய சிறுவனை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம்,
விழுப்புரம் அருகே உள்ள வி.அகரம் காலனி பகுதியை சேர்ந்தவர் மண்ணாங்கட்டி மனைவி செல்லபாக்கியம் (வயது 65). இவர் கடந்த 13-ந் தேதி திடீரென மாயமானார். இதுகுறித்த புகாரின்பேரில் வளவனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன செல்லபாக்கியத்தை தேடி வந்தனர்.
இந்நிலையில் செல்லபாக்கியத்தின் பக்கத்து வீட்டை சேர்ந்த 17 வயதுடைய சிறுவனை போலீசார் சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரித்ததில் அவன், செல்லபாக்கியத்தை கொலை செய்தது தெரியவந்தது. தொடர்ந்து, அந்த சிறுவனிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு செல்லபாக்கியத்திடம் அந்த சிறுவன் ரூ.2 ஆயிரம் திருடியுள்ளான். இதையறிந்த செல்லபாக்கியம், அந்த சிறுவனை பார்க்கும் போது எல்லாம் தன்னிடம் திருடிய பணத்தை திருப்பித் தரும்படி கேட்டு திட்டி வந்துள்ளார். கடந்த 13-ந் தேதி இரவு 7.30 மணிக்கு தனது பாட்டி வீட்டில் இருந்த சிறுவனிடம், செல்லபாக்கியம் பணத்தை கேட்டுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த அந்த சிறுவன், செல்லபாக்கியத்தை தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார். உடனே கதிர்வேல் என்பவரின் வீட்டின் செப்டிக் டேங்க் உரையில் செல்லபாக்கியத்தின் உடலை போட்டு மறைத்துள்ளார். இதையடுத்து அந்த சிறுவனை போலீசார் கைது செய்தனர்.