பத்மநாபபுரம், சுசீந்திரத்தில் பொங்கலிட்டு ஆற்றுக்கால் பகவதி அம்மனுக்கு வழிபாடு
பத்மநாபபுரம், சுசீந்திரத்தில் திரளான பெண்கள் ஒன்று கூடி பொங்கல் வைத்து ஆற்றுக்கால் பகவதி அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடத்தினர்.
நாகர்கோவில்,
பத்மநாபபுரம், சுசீந்திரத்தில் திரளான பெண்கள் ஒன்று கூடி பொங்கல் வைத்து ஆற்றுக்கால் பகவதி அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடத்தினர்.
பொங்கலிட்டு வழிபாடு
திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் நேற்று பொங்கல் வழிபாடு நடந்தது. இந்த நாளில் ஒவ்வொரு வருடமும் குமரி மாவட்டத்தில் இருந்து ஏராளமான பெண்கள் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று மண்பானையில் பொங்கல் வைத்து வழிபாடு நடத்துவது வழக்கம்.
ஆனால் கடந்த ஆண்டை போல இந்த வருடமும் கொரோனா கட்டுப்பாடு காரணமாக அவரவர் வீடுகள் முன்பு பொங்கலிட கேரள அரசு உத்தரவிட்டது. இதனால் குமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலுக்கு செல்ல முடியவில்லை. அவரவர் வீடுகள் முன்பே பொங்கலிட்டனர்.
பத்மநாபபுரம், சுசீந்திரத்தில்...
அதே சமயத்தில் பத்மநாபபுரம் பகுதியில் 400-க்கும் மேற்பட்ட பெண்கள் ஒன்று கூடி பொங்கலிட்டு வழிபாடு நடத்தினர்.
ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் காலை 10.50 மணிக்கு பொங்கலிடும் நேரத்தை கணக்கிட்டு அதே நேரத்தில் இங்கும் பொங்கலிடப்பட்டது.
இதேபோல் சுசீந்திரம் கோவில் பகுதியில் உள்ள மேலத்தெரு இளைஞர்கள் சார்பில் 108 பொங்கல் வழிபாடு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பெண்கள் அனைவரும் புத்தாடை உடுத்தி தங்களுடை வீடுகள் முன்பு பொங்கலிட்டு அதை படைத்து வழிபாடு செய்தனர்.
இதேபோல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பெண்கள் பொங்கலிட்டு ஆற்றுக்கால் பகவதி அம்மனை வழிபட்டனர்.