தினத்தந்தி புகார் பெட்டி

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 8939278888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-02-17 19:00 GMT
முட்புதர்கள் அகற்றப்படுமா?
தர்மபுரி நகரையொட்டி உள்ள இலக்கியம்பட்டி ஏரி பராமரிப்பு இல்லாமல் உள்ளது. இதனால் முட்செடிகள் வளர்ந்து புதர் போன்று காட்சி அளிக்கிறது. தற்போது ஏரி அதன் பொலிவை இழந்து காணப்படுகிறது. இந்த ஏரியில் முட்புதர்களை அகற்றினால் ஏரி புதுப்பொலிவுடன் காணப்படுவதுடன், ஏரியை சுற்றியுள்ள பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். இதுதொடர்பாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மோகன், இலக்கியம்பட்டி, தர்மபுரி
பராமரிப்பு இல்லாத விடுதி
கிருஷ்ணகிரி நகராட்சி திருவண்ணாமலை ரோட்டில் அரசு ஆதிதிராவிட மாணவிகள் விடுதி உள்ளது. இந்த விடுதி கடந்த சில ஆண்டுகளாக செயல்படாமல் உள்ளது. இந்த விடுதி கட்டிடமும் பராமரிப்பு இல்லாமல் பாழடைந்து கிடக்கிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பராமரிப்பு இல்லாத இந்த விடுதியை பராமரிப்புக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சந்துரு, கிருஷ்ணகிரி.
அரசு ஆஸ்பத்திரி சுத்தம் செய்யப்படுமா?
சேலம் மாவட்டம் எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு தினமும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த நோயாளிகள்  சிகிச்சைக்காக வந்து செல்கிறார்கள். ஆஸ்பத்திரியில் சுத்தம் செய்யாததால் ஆங்காங்கே ரத்தக் கறை படிந்திருப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் நோயாளிகள் முகம் சுளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே நோயாளிகளின் நலன் கருதி ஆஸ்பத்திரியில் தினமும் சுத்தம் செய்து தூய்மையாக வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஹரிகிருஷ்ணன், எடப்பாடி,
குப்பைகளை எரிக்கக்கூடாது
சேலம் மாவட்டம் மேட்டூர்- கொளத்தூர் வழியாக மாசிலாபாளையம் அருகே சாலையோரத்தில் அந்த பகுதி மக்கள் குப்பைகளை கொட்டுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. சிலர் குப்பைக்கு தீ வைத்து எரிப்பதால் போக்குவரத்துக்கு இடையூறாகவும், பொதுமக்களுக்கு மூச்சுதிணறலும் ஏற்படுகிறது. மின்கம்பம் அருகே குப்பைகள் கொட்டி தீ வைப்பதால் பெரும் விபத்து அபாயம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தினமும் குப்பைகளை அள்ளி தூய்மையாக வைக்க செய்ய வேண்டும்.
-குமார், கொளத்தூர்.
தெருநாய்கள் தொல்லை
சேலம் மாநகராட்சி மணக்காடு பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. சாலையில் செல்பவர்களையும், வாகன ஓட்டிகளையும் தெருநாய்கள் துரத்தி துரத்தி கடிக்கின்றன. இதனால் பொதுமக்கள், குழந்தைகள்  வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகிறார்கள். எனவே மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து மணக்காடு சுற்று வட்டார பகுதிகளில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடித்து செல்ல வேண்டும்.
-சாமுவேல், மணக்காடு, சேலம்.
வேகத்தடைக்கு வர்ணம்
சேலம் சத்திரம்- சீதாராம் செட்டி ரோட்டில் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த அந்த பகுதியில் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வேகத்தடையில் வர்ணம் பூசப்படாததால் வாகனங்களில் வேகமாக வருபவர்கள் எதிர்பாராதவிதமாக கீழே விழுந்து அடிபடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வாகன ஓட்டிகளின் நலன் கருதி வேகத்தடைக்கு வர்ணம் பூசினால் விபத்துகளை தவிர்க்கலாம்.
-ரகு, சேலம்.
குப்பைகளை அள்ள வேண்டும் 
சேலம் மாநகராட்சி 38-வது வார்டு தியாகி நடேசன் தெருவில் நீண்ட நாளாக  குப்பைதொட்டி நிரம்பி சாலையில் குப்பைகள் சிதறிக்கிடக்கின்றன. இதனால் துர்நாற்றம் வீசுவதால் அந்த வழியாக செல்பவர்கள் மூக்கை பிடித்துக்கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுபற்றி  மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை சொல்லியும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே மாநகராட்சி அதிகாரிகள்  நடவடிக்கை எடுத்து குப்பைகளை அள்ளி தூய்மையாக வைக்க செய்வார்களா?
-பொதுமக்கள், தியாகி நடேசன் தெரு, சேலம்.
திறந்தவெளியில் கொட்டப்படும் குப்பைகள்
கிருஷ்ணகிரியில் சென்னை செல்லும் சாலையில் பெரியசாமி தெருவில் திறந்தவெளியில் குப்பைகள் தினமும் கொட்டப்படுகின்றன. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. நகராட்சி பணியாளர்கள் தினமும் காலையில் அந்த பகுதியில் குப்பைகளை அள்ளி சென்ற சிறிது நேரத்தில், அதே பகுதியில் குப்பைகளை கொட்டுவதை சிலர் வழக்கமாக கொண்டுள்ளனர். எனவே திறந்த வெளியில் குப்பைகளை கொட்டுவதை தவிர்க்க அந்த பகுதியில் குப்பை தொட்டி வைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சபரீசன், கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்