தனுஷ்கோடியில் முகாமிடும் அரிய வகை வண்ணத்துப்பூச்சிகள்
25 கிலோ மீட்டர் தூரம் கடல் கடந்து இலங்கை செல்வதற்காக உடல் வலிமையை அதிகரிக்க தனுஷ்கோடியில் அரியவகை வண்ணத்துப்பூச்சிகள் முகாமிட்டு உள்ளன என்று ஆராய்ச்சியாளர்கள் தகவல் தெரிவித்து உள்ளனர்.
ராமநாதபுரம்,
25 கிலோ மீட்டர் தூரம் கடல் கடந்து இலங்கை செல்வதற்காக உடல் வலிமையை அதிகரிக்க தனுஷ்கோடியில் அரியவகை வண்ணத்துப்பூச்சிகள் முகாமிட்டு உள்ளன என்று ஆராய்ச்சியாளர்கள் தகவல் தெரிவித்து உள்ளனர்.
தனுஷ்கோடி
இந்திய தீபகற்பத்தில் ராமேசுவரம் தீவின் தென்கடைக்கோடி பகுதியில் அமைந்துள்ளது தனுஷ்கோடி. கடந்த 1964-ம் ஆண்டு புயலுக்கு பின்னர் இங்கு மனிதர்கள் வசிக்க முடியாத பகுதியாக மாறிய நிலையில் சுற்றுலா பயணிகள் வந்து அழிந்து சிதைந்த கட்டிடங்களை பார்த்து செல்கின்றனர். மீனவர்கள் இங்கு தங்கியிருந்து மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இந்த அழிந்து சிதைந்த அழகிய கடற்கரை பகுதியில் தற்போது அரிய நிகழ்வு ஒன்று நிகழ்ந்துள்ளது.
இந்த தனுஷ்கோடி கடற்கரை பகுதிகளில் கடந்த சில நாட்களாக ஆயிரக்கணக்கான கிரிம்சன்ரோஸ் வகையை சேர்ந்த கருப்பு, வெள்ளை, கருஞ்சிவப்பு கலந்த வண்ணத்துப்பூச்சிகள் வந்து குவிந்துள்ளன. இந்த வண்ணத்துப்பூச்சிகள் தனுஷ்கோடி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் வளர்ந்துள்ள நீலஎருக்கு மற்றும் அடும்பு மலர் உள்ளிட்ட மலர்களில் உள்ள தேன்களை உறிஞ்சி வருகின்றன.
இதுகுறித்து இயற்கை மற்றும் வண்ணத்துப்பூச்சிகளின் சமூக வாழ்வியல் அமைப்பின் ஆராய்ச்சியாளர்களான பாலமதி வினோத், வினோத் சதாசிவன் மற்றும் வண்ணத்துப்பூச்சிகளின் வாழ்வியலை கவனித்து வரும் ஆய்வாளர் சந்திரசேகரன் ஆகியோர் தீவிர ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் பல வியப்பூட்டும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள ருசிகர தகவல் வருமாறு:-
உடலில் சக்தி பெற...
மேற்கண்ட வண்ணத்துப்பூச்சிகள் எனப்படும் பட்டாம்பூச்சிகள் தனுஷ்கோடி கடற்கரையில் இருந்து 25 கிலோமீட்டர் தூரமுள்ள இலங்கையை நோக்கி பயணம் செய்ய தேன் உண்பதற்காக மலர்களின் மீது வந்து குவிந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த தூரத்தினை கடல்பகுதியில் கடக்கும்போது இடைநில்லாமல் செல்ல வேண்டும் என்பதற்காகவும் அதற்கான உடல்வலிமை பெற வேண்டும் என்பதற்காகவும் இந்த வண்ணத்து பூச்சிகள் பூக்களில் அதிகளவில் தேன் பருகி தங்கள் உடலில் சக்தியை சேமித்து வருகின்றன. இந்த கிரிம்சன் ரோஸ் வண்ணத்து பூச்சிகள் கடல் கடந்து செல்லும் தன்மை உடையது என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை நோக்கி பயணம்
பொதுவாக விமானங்கள் அதிக தூரம் பயணம் செய்யும்போது இடையில் உள்ள விமான நிலையங்களில் எரிபொருள் நிரப்பி செல்வதுபோல் பல பகுதிகளில் இருந்து வரும் இந்த வண்ணத்து பூச்சிகள் தங்களுக்கான எரிபொருளான தேனை உண்பதற்காக முகாமிடும் பகுதியாக தனுஷ்கோடி அமைந்துள்ளது. நீலஎருக்கு, அடும்பு மலர்களில் ஒவ்வொரு வண்ணத்துப்பூச்சிகளும் 30 விநாடிகள் தேன் அருந்தி அதன்பின்னர் இலங்கையை நோக்கி தங்களின் பயணத்தை தொடங்கி வருகின்றன. இந்த வண்ணத்துப்பூச்சிகள் கால நிலை, பருவ நிலை மாற்றம் மற்றும் உணவுக்கு ஏற்ற இடங்களை தேர்வு செய்து கடல் கடந்து செல்லும் தன்மை உடையது என்று கடந்த கால ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
சிறந்த உயிரியியலாளரும் ஆய்வாளருமான பைஜு என்பவர் கடந்த 2016-ம் ஆண்டு முதல் மன்னார்வளைகுடா கடல்பகுதியில் இருந்து இந்த கிரிம்சன் ரோஸ் வண்ணத்துப்பூச்சிகள் இலங்கையை நோக்கி பருவநிலை மாற்றத்தை எதிர்பார்த்து செல்வதை கண்டறிந்துள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த வண்ணத்துப்பூச்சிகள் பருவநிலை மற்றும் உணவுத் தேவைக்காக மட்டுமே இவ்வாறு கடல்கடந்து செல்கிறதா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.