மின்வேலியில் சிக்கி பெண் சாவு

திருவண்ணாமலை அருகே மின்வேலியில் சிக்கி பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக தந்தை-மகன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2022-02-17 18:32 GMT
திருவண்ணாமலை

திருவண்ணாமலை அருகே மின்வேலியில் சிக்கி பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக தந்தை-மகன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிணமாக கிடந்தார்

திருவண்ணாமலை அருகே உள்ள பாலானந்தல் மாயாகுளம் பகுதியை சேர்ந்தவர் பூபாலன், விவசாயி. இவரது மனைவி ஜெயந்தி (வயது 33). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். 

நேற்று முன்தினம் இரவு கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. இதனால் கோபித்து கொண்டு ஜெயந்தி இரவில் வீட்டில் இருந்து வெளியே சென்று உள்ளார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. 

நேற்று அதிகாலை அந்த பகுதியில் உள்ள சுந்தரம் என்பவரது விவசாய நிலத்தில் ஜெயந்தி பிணமாக கிடைந்தார். இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து மங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். அப்போது ஜெயந்தியின் கையில் நெல்மணிகள் இருந்து உள்ளது. 

இதையடுத்து ஜெயந்தியின் உடலை மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி  வைத்தனர். 

மின்வேலியில் சிக்கி...

இதையடுத்து போலீசார் அந்த பகுதியில் நெல் பயிரிடப்பட்டுள்ள வயல் எங்கு உள்ளது என்று பார்வையிட்டபோது ஜெயந்தி இறந்துகிடந்த இடத்தில் இருந்து 300 மீட்டர் தொலையில் உள்ள பாலகிருஷ்ணன் என்பவர் நிலத்தில் மின்வேலி அமைக்கப்பட்டு இருந்ததற்கான அடையாளம் இருந்தது.

விசாரணையில் ஜெயந்தி அந்த மின்வேலியில் சிக்கி உயிரிழந்ததும், போலீசார் வருவதை அறிந்த நிலத்தின் உரிமையாளர் மின்வேலியை உடனடியாக அகற்றியதும் தொியவந்தது. 

மேலும் மின்வேலியில் சிக்கி இறந்த ஜெயந்தியின் உடலை அங்கிருந்து எடுத்து சென்று அருகில் உள்ள நிலத்தில் வீசப்பட்டதும் தெரியவந்தது. 

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சட்ட விரோதமாக விவசாய நிலத்தில் மின்வேலி அமைத்ததாக பாலகிருஷ்ணன் (75), அவரது மகன் சந்திரசேகரன் (54), சந்திரசேகரனின் மனைவி மஞ்சுளா (45) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். 

மேலும் செய்திகள்