காலியாக உள்ள நீதிபதி பணியிடங்கள் எப்போது நிரப்பப்படும்
மதுரை கோர்ட்டில் காலியாக உள்ள நீதிபதி பணியிடங்கள் எப்போது நிரப்பப்படும்? என்று ஐகோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது.
மதுரை,
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதாகி, சிறையில் அடைக்கப்பட்டு உள்ள கைதிகள் தனுஷ், சிவகாளை ஆகியோர் தங்களுக்கு ஜாமீன் வழங்கக்கோரி, மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர். ஏற்கனவே நிலுவையில் இருந்த இந்த மனு நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பு வக்கீல் ஆஜராகி, போதைப் பொருள் தடுப்பு வழக்குகளை விசாரிக்க மதுரையில் 3 கோர்ட்டுகள் உள்ளன. இவற்றில் ஒரு கோர்ட்டில் மட்டுமே நீதிபதி உள்ளார். மற்ற 2 கோர்ட்டுகளில் நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளன.
இதனால் ஏராளமான போதைப்பொருள் தடுப்பு வழக்குகள் விசாரிக்கப்படாமல் தேங்கி உள்ளன. இந்த வழக்குகளில் கைதான 1,200-க்கும் அதிகமான கைதிகள் பல்வேறு சிறையில் உள்ளனர் என்று வாதாடினார்.
அதற்கு அரசு தரப்பு வக்கீல் ஆஜராகி, சம்பந்தப்பட்ட கோர்ட்டுகளில் நீதிபதிகளை நியமிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
இதையடுத்து நீதிபதி, மதுரை போதைப்பொருள் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு கோர்ட்டுகளில் காலியாக உள்ள 2 நீதிபதி பணியிடங்கள் எப்போது நிரப்பப்படும்? என கேள்வி எழுப்பினார். மேலும், இதுகுறித்து விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் இந்த கோர்ட்டு உரிய உத்தரவு பிறப்பிக்கும் என்று கூறிய நீதிபதி, இந்த வழக்கு விசாரணையை மார்ச் மாதம் 1-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.