பரமத்திவேலூர்:
பரமத்தி அருகே உள்ள வீரணம்பாளையத்தை சேர்ந்தவர் சுகுமார் (வயது 42). விவசாயி. இவர் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டுக்கு அருகே தியாகராஜன் என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பில் மின்கம்பியில் நெருப்பு பொறி வந்ததாகவும், அதை பார்த்துவிட்டு வருவதாக கூறி தென்னந்தோப்புக்கு சென்றார்.
ஆனால் வெகு நேரமாகியும் சுகுமார் வீட்டுக்கு வராததால் குடும்பத்தினர் அவரை தேடி தென்னந்தோப்புக்கு சென்று பார்த்துள்ளனர். இங்கு மின்கம்பியில் தொங்கி கொண்டிருந்த தென்னை மட்டை மோதி சுகுமாரன் மின்சாரம் தாக்கி கீழே கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்
இதையடுத்து அவரை மீட்டு பரமத்திவேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சுகுமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.