விவசாயி கொலை வழக்கில் கள்ளக்காதலனுக்கு ஆயுள் தண்டனை
க.பரமத்தி அருகே விவசாயியை கொலை செய்த வழக்கில் கள்ளக்காதலனுக்கு ஆயுள் தண்டனை விதித்து கரூர் மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த வழக்கில் கொலையுண்டவரின் மனைவி விடுதலை செய்யப்பட்டார்.
க.பரமத்தி
கள்ளக்காதல்
கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே உள்ள அணைப்பாளையம் ஊராட்சி, முடிகணத்தைச் சேர்ந்தவர் மனோகரன்(வயது 42). விவசாயி. இவருக்கு சித்ரா(37) என்ற மனைவியும், 14 வயதில் ஒரு மகனும் உள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி 15 ஆண்டுகள் ஆனநிலையில் அதே ஊரைச் சேர்ந்த முருகேசன் மகன் சுதாகர்(22) என்பவருடன் சித்ராவுக்கு கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது.
இதனை தட்டிக்கேட்ட மனோகரனுக்கும், சித்ராவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 24-ந் தேதி அன்று சித்ராவும், சுதாகரனும் சேர்ந்து மனோகரனை தீர்த்துக்கட்ட முடிவு செய்தனர். இதனையடுத்து சுதாகர் டிராக்டரை எடுத்துக்கொண்டு க.பரமத்தி நோக்கி சென்று கொண்டு இருந்தார். அப்போது மனோகரன் க.பரமத்தியில் இருந்து முடிகணத்தை நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.
ஆயுள் தண்டனை
முடிகணம் அருகே வந்தபோது டிராக்டர் மூலம் மோட்டார் சைக்கிள் மீது மோதி மனோகரனை கொலை செய்தார். இதுகுறித்து க.பரமத்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாதேவி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சுதாகரை கைது செய்து சிறையில் அடைத்தார். இந்த வழக்கு கரூர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் இந்த வழக்கில் நேற்று மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பில் டிராக்டரை ஏற்றிக்கொலை செய்த கள்ளக்காதலன் சுதாகரனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1,000 அபராத தொகையும் வழங்கியது. இதையடுத்து அவரை கரூர் சப் ஜெயிலில் அடைத்தனர். இந்த வழக்கில் மனோகரனின் மனைவி சித்ரா விடுதலை செய்யப்பட்டார்.