வேதாரண்யேஸ்வரர் கோவில் மாசிமக தீர்த்தவாரி
வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவில் மாசிமக தீர்த்தவாரி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கடலில் புனித நீராடினர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவில் மாசிமக தீர்த்தவாரி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கடலில் புனித நீராடினர்.
மாசிமக பெருவிழா
வேதாரண்யம், வேதாரண்யேஸ்வரர் கோவில் மூர்த்தி, தீர்த்தம், தலம் ஆகிய மூன்றிலும் சிறப்புடையது. அகத்திய முனிவருக்கு திருமண கோலத்தில் சிவபெருமான் காட்சி கொடுத்த தலம்.பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த கோவிலில் ஆண்டு தோறும் மாசிமக பெருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு விழா கடந்த 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையொட்டி மாசிமக தீர்த்தவாரி நடந்தது. இதை முன்னிட்டு சந்திரசேகரசாமி பெரிய வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து சன்னதி கடல் என்னும் வேதநதி கடற்கரையில் எழுந்தருளினார்.
தீர்த்தவாரி
இதை தொடர்ந்து அங்கு அஸ்திர தேவருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தீர்த்தவாரி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கடலில் புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர். பின்னர் சாமி நாலுகால் மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு ஆறுகாட்டுத்துறை மீனவர் கிராமத்தினர், பஞ்சாயத்தார்கள் சிறப்பு ஆராதனைகள் செய்து வழிபட்டனர். இதையடுத்து வாணவேடிக்கை நிகழ்ச்சி நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர், ஆறுகாட்டுத்துறை கிராம பஞ்சாயத்தார் மற்றும் கிராமவாசிகள் செய்திருந்தனர்.
நந்திநாதேஸ்வரர் கோவில்
நாகை அருகே வடக்கு பொய்கை நல்லூரில் உள்ள நந்தி நாதேஸ்வரர் கோவில் தீர்த்தவாரி நடந்தது. முன்னதாக கோவிலில் இருந்து நந்தி நாதேஸ்வரர், அஸ்திர தேவருடன் புறப்பாடாகி கல்லார் கடற்கரையில் எழுந்தருளினார். தொடர்ந்து அங்கு அஸ்திர தேவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் சாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதையடுத்து அஸ்திர தேவருக்கு கடலில் தீர்த்தவாரி நடந்தது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.