நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு வாக்களித்தால்தான் அரசின் திட்டங்கள் மக்களை நேரடியாக சென்றடையும் - கே.பாலகிருஷ்ணன் பேச்சு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு வாக்களித்தால்தான் அரசின் திட்டங்கள் மக்களை நேரடியாக சென்றடையும் என்று கடலூரில் கே.பாலகிருஷ்ணன் கூறினார்.

Update: 2022-02-17 16:54 GMT
கடலூர், 

கடலூர் மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நேற்று அக்கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தார்.
அப்போது அவர் பேசியதாவது:-

உள்ளாட்சியில் நல்லாட்சி

கடந்த 10 ஆண்டு காலமாக அ.தி.மு.க. உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் அதிகாரிகளை வைத்துக்கொண்டு கொள்ளை அடித்தது. இதனால் உள்ளாட்சி நிர்வாகம் சீர்கெட்டு விட்டது. ஆனால் ஆட்சிக்கு வந்த 8 மாதத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்தியே தீருவோம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்து நடத்திக் காட்டியுள்ளார்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட்டணி கட்சிகளை மதித்து, அவர்களை ஒருங்கிணைத்து செயல்படுத்திய காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக கொள்கை கூட்டணியாக இருந்த நாம் லட்சிய கூட்டணியாக தொடர்கிறோம். உள்ளாட்சியில் நல்லாட்சி அமைத்தால்தான் நகராட்சி நிர்வாகம் சீர்படும். 

சமூக நீதி

சென்னையில் தாழ்த்தப்பட்ட சகோதரி மேயராக, பதவி ஏற்க உள்ளார். இதன் மூலம் முதல்-அமைச்சர் சமூக நீதியை நிலைநாட்டி உள்ளார். வீட்டை நிர்வகித்து வந்த பெண்களுக்கு தற்போது நாட்டை நிர்வகிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதேபோல் தமிழகம் முழுவதும் பட்டியலின, பழங்குடி மக்கள், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அதிகார பீடத்தில் அமரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் காலம் கடத்திய அ.தி.மு.க., தற்போது அறிவிக்கப்பட்டுள்ள உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட மட்டும் என்ன அருகதை உள்ளது?

தூக்கி எறிய வேண்டும்

கடலூர் மழை, வெள்ளம், புயல் பாதிப்புகளை சந்தித்து வரும் மாவட்டம். ஆகவே கடலூர் மாவட்டத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு வாக்களித்தால் தான் அரசின் திட்டங்கள் நேரடியாக மக்களை சென்றடைய நல்ல வாய்ப்பாக அமையும்.

தமிழக மக்கள் நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு படுதோல்வி கொடுத்தனர். அடுத்து வந்த சட்டமன்ற தேர்தலிலும் அ.தி.மு.க.வை தூக்கி எறிந்து தி.மு.க.வை ஆட்சியில் அமர வைத்தனர். அதேபோல் உள்ளாட்சி தேர்தலிலும் அ.தி.மு.க.வை தூக்கி எறிய வேண்டும். கடந்த சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து தோல்வி அடைந்த அ.தி.மு.க., உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட்டு எப்படி வெற்றி பெற முடியும்?
இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்