வாக்காளர் பட்டியலில் 183 பேரின் பெயர் திடீர் மாயம் திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

திண்டுக்கல் நாகல்நகரில் 183 பேரின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாததால் பொதுமக்கள் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

Update: 2022-02-17 13:19 GMT

திண்டுக்கல்:
திண்டுக்கல் நாகல்நகர் சந்தைரோடு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று காலை ஆர்.எஸ்.சாலைக்கு திரண்டு வந்தனர். பின்னர் தங்கள் பகுதியை சேர்ந்த 183 பேரின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை என்று கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து சமரசம் செய்தனர். மேலும் மாநகராட்சி அலுவலகத்துக்கு சென்று அதிகாரிகளிடம் முறையிடும்படி அறிவுறுத்தினர்.
இதைத் தொடர்ந்து அவர்கள் வாக்காளர் அட்டைகளுடன் மாநகராட்சி அலுவலகத்துக்கு வந்தனர். மேலும் வாக்காளர் பட்டியலில் 183 பேரின் பெயர் நீக்கப்பட்டு உள்ளது.. அதை கண்டித்து வாக்காளர் அட்டையை திரும்ப ஒப்படைக்க போவதாக கூறி முற்றுகையில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களிடம், அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதிகாரிகள் சமரசம்
அப்போது நாளை (சனிக்கிழமை) தேர்தல் நடைபெற இருக்கும் சூழலில் எங்களுக்கு பூத் சிலிப் வழங்கப்படவில்லை. இதுகுறித்து தேர்தல் அலுவலர்களிடம் கேட்ட போது, வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என்று கூறுகின்றனர். திண்டுக்கல் சந்தைரோடு, பஜார்தெரு பகுதிகள் முன்பு 36-வது வார்டில் இருந்தன. இதனால் 36, 37 ஆகிய 2 வார்டுகளிலும் வாக்காளர் பட்டியலை சோதனை செய்து பார்த்து விட்டோம். எங்களின் பெயர் இல்லை. தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் பார்த்தாலும் விவரம் வரவில்லை.
எனவே எங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும், இல்லாவிட்டால் வாக்காளர் அடையாள அட்டைகளை ஒப்படைத்து விடுவோம் என்று பொதுமக்கள் கூறினர். அதுபற்றி உயர் அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதன்பேரில் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்