ஆவடியில் உள்ள மத்திய அரசு நிறுவனங்களில் வேலை வாங்கி தருவதாக ரூ.4 கோடி மோசடி - பேராசிரியர், என்ஜினீயர்கள் கைது

சென்னை ஆவடியில் உள்ள மத்திய அரசு நிறுவனங்களில் வேலை வாங்கி தருவதாக 150-க்கும் மேற்பட்டவர்களிடம் ரூ.4 கோடி வரை மோசடி செய்த உதவி பேராசிரியர், என்ஜினீயர்கள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-02-17 00:28 GMT
ஆவடி,

சென்னை ஆவடியில் உள்ள கனரக வாகன தொழிற்சாலை வளாகத்தில் இருக்கும் வங்கியில் வாலிபர் ஒருவர், தனது கையில் கனரக வாகன தொழிற்சாலையின் போலி அடையாள அட்டை மற்றும் முத்திரையுடன் நின்றிருந்தார். இதுபற்றி தொழிற்சாலை அதிகாரி பாலசுப்பிரமணியன் அளித்த புகாரின்பேரில் ஆவடி டேங்க் பேக்டரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விமலநாதன், அந்த வாலிபரை பிடித்து விசாரித்தார்.

விசாரணையில் அவர், மாங்காடு பகுதியை சேர்ந்த ஸ்ரீராமன் (வயது 30) என்பதும், என்ஜினீயரான இவர், பல்லாவரத்தில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக வேலை செய்து வந்ததும் தெரிந்தது.

மேலும் இவர், தனது நண்பர்களான செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் பகுதியை சேர்ந்த என்ஜினீயர் தினேஷ்குமார் (31), அனகாபுத்தூர் கலைவாணர் தெருவை சேர்ந்த கிரிக்கெட் பயிற்சியாளரும், என்ஜினீயருமான கார்த்திக் (32) மற்றும் செங்கல்பட்டு பெரியமேலமையூர் கிராமத்தைச் சேர்ந்த பட்டதாரி ஆசிரியரான கிறிஸ்டோபர் (33) ஆகியோருடன் சேர்ந்து ஆவடியில் உள்ள மத்திய அரசு நிறுவனங்களில் வேலை வாங்கி தருவதாக கூறி பணம் மோசடி செய்ததும் தெரிந்தது.

இவ்வாறு சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், திருச்சி உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பட்டதாரி வாலிபர்கள் மற்றும் அவர்களுக்கு தெரிந்தவர்களிடம் ஆவடியில் உள்ள மத்திய அரசின் பாதுகாப்பு நிறுவனமான கனரக வாகன தொழிற்சாலை, படை உடை தொழிற்சாலை ஆகிய நிறுவனங்களில் வேலை வாங்கி தருவதாக கூறி பதவிகளுக்கு ஏற்ப ரூ.25 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை பெற்று உள்ளனர்.

இவ்வாறு சுமார் 150-க்கும் மேற்பட்டவர்களிடம் ரூ.4 கோடி வரை பெற்று, மத்திய அரசு நிறுவனத்தின் போலி முத்திரை மூலம் போலியான பணி நியமன ஆணையை தயாரித்து கொடுத்து மோசடி செய்ததும் தெரிந்தது. இதையடுத்து போலீசார் ஸ்ரீராமன், தினேஷ்குமார், கார்த்திக், கிறிஸ்டோபர் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.

கைதான தினேஷ்குமார் 2018-ம் ஆண்டு ஆவடி படை உடை தொழிற்சாலையில் வேலை வாங்கி தருவதாக கூறிய ஒருவரிடம் ரூ.4 லட்சம் கொடுத்து ஏமாற்றம் அடைந்தார். இதனால் அதே பாணியில் நண்பர்களுடன் சேர்ந்து இந்த மோசடியில் ஈடுபட்டது தெரிந்தது. கைதான 4 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்