எரிந்த நிலையில் வாலிபர் பிணம்: மாமனாரே உயிருடன் எரித்து கொன்றது அம்பலம்
எரிந்த நிலையில் பிணமாக கிடந்த வாலிபர், திருட்டை கைவிட மறுத்ததால் மாமனாரால் உயிருடன் எரித்து கொல்லப்பட்டது தெரியவந்தது.
சென்னை,
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த நரசங்குப்பத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 53). கல்பாக்கம் அணு மின்நிலைய ஊழியர். இவரது மகள் நிஷாந்தி (20). முகநூல் மூலமாக அறிமுகமான கர்நாடக மாநிலம் பெல்காம் பகுதியை சேர்ந்த மக்புல் (23) என்பவரை காதலித்து கடந்த 8 மாதத்துக்கு முன் திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் கர்நாடக மாநிலத்தில் வசித்து வந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் நிஷாந்தி தன்னுடைய தந்தைக்கு போன் செய்து தான் மிகவும் கஷ்டப்படுவதாக கூறினார். இதை கேட்ட ராஜேந்திரன், இருவரையும் தன்னுடைய சொந்த ஊருக்கு வரவழைத்து அனுபுரத்தில் உள்ள அவருக்கான ஊழியர் குடியிருப்பில் இருவரையும் குடியமர்த்தினார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் நரசங்குப்பத்தில் உள்ள வீட்டில் மக்புல் வெட்டுக்காயங்களுடன் எரிந்த நிலையில் இறந்துகிடந்தார். இதுதொடர்பாக சதுரங்கப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேந்திரனிடம் விசாரித்தனர். விசாரணையில் அவர் மருமகன் மக்புலை கொன்றதை ஒப்புக்கொண்டார். இது சம்பந்தமாக போலீசாரிடம் ராஜேந்திரன் கூறியதாவது:-
எனது மகளை முகநூல் மூலம் காதலித்து மக்புல் திருமணம் செய்து கொண்ட பின் அனுபுரத்தில் அவர்களை தங்க வைத்தேன். அங்கு மக்புல் திருட்டில் ஈடுபட்டார். எனது மகள் மூலம் மக்புலை கண்டித்து பார்த்தேன். ஆனால் அவர் கேட்கவில்லை என்பதால் நரசங்குப்பத்தில் உள்ள எனது வீட்டில் வைத்து அவரை வெட்டினேன். ஆனால் அதில் மக்புல் இறக்கவில்லை என்பதை தெரிந்து, அவரை உயிருடன் பெட்ரோலை ஊற்றி எரித்து கொன்றேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
போலீசார் ராஜேந்திரனிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.