கர்நாடக சட்டசபையில் கடும் அமளி

தேசிய கொடியை அவமதித்ததாக கூறி மந்திரி ஈசுவரப்பாவை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி சட்டசபையில் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு காங்கிரஸ் உறுப்பினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து கடும் அமளி ஏற்பட்டதால் சபை ஒத்திவைக்கப்பட்டது.

Update: 2022-02-16 22:13 GMT
பெங்களூரு: தேசிய கொடியை அவமதித்ததாக கூறி மந்திரி ஈசுவரப்பாவை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி சட்டசபையில் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு காங்கிரஸ் உறுப்பினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து கடும் அமளி ஏற்பட்டதால் சபை ஒத்திவைக்கப்பட்டது. 

ஒத்திவைப்பு தீர்மானம்

கர்நாடக சட்டசபையின் கூட்டுக்கூட்டம் கடந்த 14-ந்தேதி பெங்களூரு விதான சவுதாவில் தொடங்கியது. இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் கர்நாடக சட்டசபை, மேல்-சபை கூட்டுக்கூட்டத்தில் கவர்னர் தாவர்சந்த் கெலாட் உரையாற்றினார். அப்போது பி.பி.எல். ரேஷன் கார்டுதாரர்களுக்கு கூடுதலாக தலா ஒரு கிலோ அரிசி வழங்கும் அறிவிப்பு உள்பட பல்வேறு திட்டங்களை அறிவித்தார். 

இந்த நிலையில் கர்நாடக சட்டசபையின் 3-வது நாள் கூட்டம் நேற்று காலை தொடங்கியது.  நேற்று கேள்வி நேரம், பூஜ்ஜிய நேரத்தை தொடர்ந்து டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடிக்கு பதிலாக காவி கொடி ஏற்றுவோம் என்று கூறிய மாநில கிராம வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை மந்திரி ஈசுவரப்பாவுக்கு எதிராக காங்கிரஸ் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்தது. இந்த ஒத்திவைப்பு தீர்மானத்தின் மீது தொடக்கநிலையில் பேசுமாறு சபாநாயகர் காகேரி அனுமதி அளித்தார். 

பதவி நீக்க வேண்டும்

இதையடுத்து எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா அந்த தீர்மானத்தின் மீது பேசும்போது கூறியதாவது:-

கிராம வளர்ச்சி-பஞ்சாயத்து ராஜ் மந்திரி ஈசுவரப்பா, கடந்த 9-ந் தேதி செங்கோட்டையில் காவி கொடி ஏற்றுவதாக கூறினார். ஆனால் அரசியல் சாசனம், தேசிய கீதம், தேசிய கொடிக்கு அவமரியாதை ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளார். சட்டப்படி தேசிய கீதம், தேசிய கொடி, அரசியல் சாசனத்திற்கு உரிய மரியாதை வழங்க வேண்டும். தேசிய கொடியை பார்க்கும்போது நமக்கு மெய் சிலிர்க்கிறது. எழுந்து நின்று மரியாதை கொடுக்கிறோம்.

செங்கோட்டையில் எப்போதும் நமது தேசிய கொடி பறக்கிறது. தேசிய கொடியை அவமதிக்கும் நபர்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்க சட்டத்தில் இடம் உள்ளது. இது தேசத்துரோக சட்டத்தில் வருகிறது. மந்திரி ஈசுவரப்பா தேசத்துரோக கருத்துகளை கூறி ஒரு வாரம் ஆகியும், இதுவரை அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. முதல்-மந்திரி அவரை மந்திரிசபையில் இருந்து பதவி நீக்கம் செய்திருக்க வேண்டும். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தேசத்துரோக வழக்கு 

டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தியபோது, செங்கோட்டையில் தேசிய கொடியை கீழே இறக்கி விவசாய கொடியை ஏற்றினர். அவர்கள் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. அத்தகைய நடவடிக்கையை ஈசுவரப்பா மீதும் எடுத்திருக்க வேண்டும் அல்லவா?. ஒரு மந்திரியாக தேசிய கொடியை மதிக்க மாட்டேன் என்று நடந்து கொள்வது வெட்கக்கேடானது. 

இத்தகையவர் ஒரு நிமிடம் கூட மந்திரி பதவியில் நீடிக்க கூடாது. நமது தேசிய கொடிக்கு பெரிய வரலாறு உள்ளது. அதனால் தேசிய கொடியை அவமதித்த மந்திரி ஈசுவரப்பாவை உடனடியாக பதவி நீக்க வேண்டும். அவர் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு சித்தராமையா பேசினார்.

அவமதிக்கும் வகையில் பேசவில்லை

அதைத்தொடர்ந்து பேசிய சட்டத்துறை மந்திரி மாதுசாமி, "மந்திரி ஈசுவரப்பா தேசிய கொடியை அவமதிக்கும் வகையில் பேசவில்லை. நிருபர்கள் கேள்வி கேட்கும்போது காவி கொடி குறித்து அவர் பேச்சு வழக்கில் கூறியுள்ளார். அவர் எந்த தேசத்துரோகமும் செய்யவில்லை. 

பா.ஜனதாவை சேர்ந்த மந்திரி தேசத்துரோக கருத்துகளை கூறுவாரா?. பா.ஜனதாவினர் தேசபக்தர்கள். காஷ்மீரில் பயங்கரவாதிகளின் மிரட்டலையும் பொருட்படுத்தாமல் மோடி உள்ளிட்ட பா.ஜனதா தலைவர்கள் தேசிய கொடி ஏற்றினர். பா.ஜனதா தேசபக்தி கொண்ட கட்சி. அதனால் காங்கிரஸ் கொண்டு வந்துள்ள ஒத்திவைப்பு தீர்மானத்தை நிராகரிக்க வேண்டும்" என்றார்.

காங்கிரசார் தர்ணா

இதற்கு காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பேசினர். பதிலுக்கு பா.ஜனதா உறுப்பினர்களும் பேசினர். இதனால் சபையில் கூச்சல்-குழப்பம் ஏற்பட்டு கடும் அமளி உண்டானது. ஈசுவரப்பாவை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி காங்கிரஸ் உறுப்பினர்கள் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈசுவரப்பாவை நீக்க கோரி அவர்கள் கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து சபையை சபாநாயகர் பகல் 3 மணிக்கு ஒத்திவைத்தார். சபை மீண்டும் பகல் 3 மணிக்கு கூடியபோது, காங்கிரஸ் உறுப்பினர்கள் கைகளில் தேசிய கொடிய ஏந்தி தர்ணா போராட்டத்தை தொடர்ந்தனர். 

தேசிய கொடியுடன்...

அப்போது பேசிய சபாநாயகர் காகேரி, "உங்களின் சொந்த போராட்டத்திற்கு தேசிய கொடியை பயன்படுத்துவது சரியல்ல. இது தேசிய கொடியை அவமதிக்கும் செயல். நீங்கள் தேசிய கொடியை பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும். சட்டசபையில் இவ்வாறு தேசிய கொடியை ஏந்தி போராட்டம் நடைபெற்றது இல்லை" என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், காங்கிரஸ் கொண்டு வந்த ஒத்திவைப்பு தீர்மானத்தை நிராகரிப்பதாக அறிவித்தார். காங்கிரஸ் உறுப்பினர்கள் அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். ஈசுவரப்பாவை நீக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். இதனால் சபையில் கடும் அமளி உண்டானது. 

சபை ஒத்திவைப்பு

இதையடுத்து சபையை சபாநாயகர் நாளைக்கு (அதாவது இன்று) ஒத்திவைத்தார். காங்கிரஸ் கட்சியினர் இன்றும் (வியாழக்கிழமை) சட்டசபையில் தர்ணா போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளனர். அதனால் சட்டசபை நிகழ்வுகள் முடங்கும் நிலை ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்