மூதாட்டி படுகொலை; கிராம பஞ்சாயத்து உறுப்பினரின் மகன் கைது

கே.ஆர்.நகர் அருகே அம்பேத்கர் பவனை காலி செய்யாத ஆத்திரத்தில் தலையில் கல்லைபோட்டு மூதாட்டியை கொன்ற கிராம பஞ்சாயத்து உறுப்பினரின் மகன் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-02-16 21:45 GMT
மைசூரு:  கே.ஆர்.நகர் அருகே அம்பேத்கர் பவனை காலி செய்யாத ஆத்திரத்தில் தலையில் கல்லைபோட்டு மூதாட்டியை கொன்ற கிராம பஞ்சாயத்து உறுப்பினரின் மகன் கைது செய்யப்பட்டார்.

 அம்பேத்கர் பவனை காலி செய்யாததால்...

மைசூரு மாவட்டம் கே.ஆர்.நகர் தாலுகா ஓசூரு கல்லள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ஜெயம்மா(வயது 60). இவர், குடிசை வீட்டில் வசித்து வந்தார். இதற்கிடையே அந்த குடிசை வீடு இடிந்து தரைமட்டமானது. இதனால் தங்குவதற்கு இடம் இல்லாமல் அப்பகுதியில் உள்ள அம்பேத்கர் பவன் கட்டிடத்தின் ஒரு பகுதியில் வசித்து வந்தார். 

அம்பேத்கர் பவனில் மூதாட்டி ஜெயம்மா தங்கியிருப்பது ஓசூரு கல்லள்ளி கிராம பஞ்சாயத்து உறுப்பினர் மகாலிங்கத்தின் மகன் விஸ்வாகுமார்(28) மற்றும் அவரது நண்பர்களுக்கு பிடிக்கவில்லை. இதனால் அவர்கள், மூதாட்டியை பவனை காலி செய்துவிட்டு செல்லும்படி கூறிவந்துள்ளனர்.

 ஆனால் அதற்கு ஜெயம்மா மறுப்பு தெரிவித்து தொடர்ந்து அம்பேத்கர் பவனிலேயே தங்கி வந்தார். இதனால் விஸ்வாகுமார், அவரது நண்பர்கள் 4 பேரும் மூதாட்டி ஜெயம்மாவுக்கு பல்வேறு வகையில் தொல்லை கொடுத்து தகராறு செய்து வந்துள்ளனர்.

 மூதாட்டி படுகொலை

இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு அம்பேத்கர் பவனில் ஜெயம்மா தூங்கி கொண்டிருந்தார். இந்த சந்தர்ப்பத்தில் அங்கு ஜெயம்மா, அவரது நண்பர்கள் 4 பேர் வந்தனர். பின்னர் அவர்கள், ஜெயம்மாவின் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்துள்ளனர். இதையடுத்து 5 பேரும் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். 

நேற்று காலை மூதாட்டி ஜெயம்மா படுகொலை செய்யப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள், ஆர்.ஆர்.நகர் போலீசாருக்கு உடனடியாக தகவல் கொடுத்தனர். அந்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் கொலையான ஜெயம்மாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

 கைது

விசாரணையில், அம்பேத்கர் பவனை காலி செய்யாததால் ஜெயம்மாவை, கிராம பஞ்சாயத்து உறுப்பினர் மகாலிங்கத்தின் மகன் விஸ்வகுமார் உள்பட 5 பேர் கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், விஸ்வகுமாரை கைது செய்தனர். மேலும் தப்பியோடி தலைமறைவாக உள்ள 4 பேரை வலைவீசி தேடிவருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்