வாலிபரை அரிவாளால் வெட்டியவர் கைது

வாலிபரை அரிவாளால் வெட்டியவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-02-16 20:46 GMT
வாசுதேவநல்லூர்:
வாசுதேவநல்லூர் தலைவன்கோட்டை வேதக் கோயில் தெருவை சேர்ந்த முத்துப்பாண்டியன் மகன் மகேந்திரன் (வயது 20), மலையடிக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த சண்முகையாபாண்டியன் மகன் குரங்கு மகேந்திரன் என்ற மகேந்திரன் (35). இருவரும் நண்பர்களாக பழகி வந்துள்ளனர். கடந்த 5 வருடங்களுக்கு முன்பு தலைவன்கோட்டை கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவருக்கும், குரங்கு மகேந்திரனுக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. அப்போது இரு தரப்பினருமே ஒருவர் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதாக புளியங்குடி போலீசில் வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் கிருஷ்ணசாமி உறவினர் மற்றொரு மகேந்திரனும், குரங்கு மகேந்திரனும் பகையை மறந்து நண்பர்களாக பழகி வருகின்றனர். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு மகேந்திரன், குரங்கு மகேந்திரன், கீழப்புதூரைச் சேர்ந்த கருத்த பாண்டியன் மகன் சின்னராஜ் (52) ஆகியோர் வாசுதேவநல்லூர் ஊருக்கு மேற்கே உள்ள பூலாங்குளம் கரையருகே மது குடித்தனர். அப்போது ஏற்பட்ட தகராறில் சின்னராஜ் மற்றும் குரங்கு மகேந்திரன் ஆகிய இருவரும் சேர்ந்து மகேந்திரனை வெட்டினார்கள். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதுகுறித்த புகாரின் பேரில் வாசுதேவநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சின்னராஜை கைது செய்தனர். குரங்கு மகேந்திரனை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்