‘தினத்தந்தி’ புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
புகார் பெட்டி செய்தி எதிரொலி
தென்காசி மாவட்டம் புளியங்குடி பஸ் நிலையம் அருகே இருந்து மாட்டு சந்தை வரை சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலை குண்டும், குழியுமாக கிடந்தது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வந்தனர். இந்த சாைலயை சீரமைக்க வேண்டும் என்று கடையத்தை சேர்ந்த திருக்குமரன் என்பவர் ‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு அனுப்பிய பதிவு செய்தியாக வெளியானது. இதன் எதிரொலியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த சாலையை சமீபத்தில் சீரமைத்து உள்ளனர். கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த ‘தினத்தந்தி’க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அவர் தனது நன்றியையும், பாராட்டையும் தெரிவித்து உள்ளார்.
குப்பைகளால் சுகாதாரக்கேடு
பாளையங்கோட்டை தியாகராஜநகர் ரெயில்வே கேட்டின் அருகே இருந்து பொன்விழாநகர் செல்லும் சாலையில், அரசு ஊழியர் குடியிருப்பின் எதிர்ப்புறம் ஏராளமான குப்பைகள் தேங்கி கிடக்கிறது. மாநகராட்சி குப்பைத்தொட்டி எதுவும் அங்கு வைக்கப்படாததாலும், தினந்தோறும் அந்த குப்பைகளை அகற்றாததாலும் சாலை முழுவதும் குப்பை பரவி, மிகவும் சுகாதார சீர்கேடாக காட்சி அளிக்கிறது.
மேலும், அந்த குப்பைகளை கிளற வரும் நாய் மற்றும் கால்நடைகளால் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலும் ஏற்படுகிறது. இதுதொடர்பாக மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து அப்பகுதியை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் மாற்ற கேட்டுக்கொள்கிறேன்.
சரஸ்வதி, பாளையங்கோட்டை.
சாலையின் நடுவே மின்கம்பம்
பாளையங்கோட்டை அருகே ரெட்டியார்பட்டியில் ராஜகோபால்நகர் உள்ளது. இந்த பகுதியில் உள்ள மின்கம்பங்கள் சாலையின் நடுவே அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் அந்த வழியாக வாகனங்களில் செல்லும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகிறார்கள். எனவே, பொதுமக்களின் நலன் கருதி இந்த மின்கம்பத்தை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
சின்ராஜ், ரெட்டியார்பட்டி.
குடிநீர் தட்டுப்பாடு
தெற்கு வீரவநல்லூர் பாரதிநகர் பொத்தை பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகிறார்கள். இந்த பகுதியில் வாரத்தில் 2 நாட்கள் மட்டும் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதனால் ெபாதுமக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள். ஆகவே, பாரதிநகர் ெபாத்தை பகுதியில் குடிநீர் தட்டுப்பாடின்றி தினமும் கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
கண்ணன், பாரதிநகர் பொத்தை.
அங்கன்வாடி கட்டிடம் புதுப்பிக்கப்படுமா?
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா மேலநீலிதநல்லூர் அருகே உள்ள தர்மத்தூரணி கிராமத்தில் அங்கன்வாடி கட்டிடம் பாதி இடிந்த நிலையிலும், மீதி இடியும் நிலையிலும் காணப்படுகிறது. மேலும் கட்டிடத்தின் மேல் ஓடுகள் விழும் நிலையில் உள்ளது. இங்கு வரும் குழந்தைகளும், அங்கன்வாடி பணியாளர்களும் வெயிலில் இருந்து வருகிறார்கள். ஆகவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த அங்கன்வாடி மைய கட்டிடத்தை புதுப்பித்து தருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
சுந்தர்ராஜன், தர்மத்தூரணி.
நாய்கள் தொல்லை
ஆழ்வார்குறிச்சி செட்டிகுளம் மேலூரில் தெருநாய்கள் தொல்லை அதிக அளவில் உள்ளது. இதனால் சாலையில் நடந்து செல்ல பொதுமக்கள் அச்சப்படுகிறார்கள். இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. எனவே, பொதுமக்களுக்கு தொல்லை தரும் தெரு நாய்களை பிடித்து செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
குமார், செட்டிகுளம்.
சாலை சீரமைக்கப்படுமா?
தூத்துக்குடி ஆரோக்கியபுரம் வி.வி.டி. நினைவு ஆரம்ப பள்ளிக்கூடம் அருகே உள்ள சாலை குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. மழை காலங்களில் சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இதனால் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே, வாகன ஓட்டிகள் நலன் கருதி இந்த சாைலயை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சீரமைக்க வேண்டுகிறேன்.
அந்தோணி, ஆரோக்கியபுரம்.