“உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு மக்கள் மீண்டும் பாடம் புகட்டுவார்கள்”- கனிமொழி எம்.பி. பிரசாரம்
“நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் அ.தி.மு.க.வுக்கு மக்கள் மீண்டும் பாடம் புகட்டுவார்கள்” என்று கனிமொழி எம்.பி. பேசினார்.
களக்காடு:
“நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் அ.தி.மு.க.வுக்கு மக்கள் மீண்டும் பாடம் புகட்டுவார்கள்” என்று கனிமொழி எம்.பி. பேசினார்.
கனிமொழி எம்.பி. பிரசாரம்
நெல்லை மாவட்டம் களக்காடு, விக்கிரமசிங்கபுரம் நகரசபைகள், சேரன்மாதேவி, வீரவநல்லூர் ஆகிய பேரூராட்சிகளில் போட்டியிடும் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து கனிமொழி எம்.பி. நேற்று திறந்த வேனில் சென்று பிரசாரம் செய்தார்.
பிரசாரத்தின்போது கனிமொழி எம்.பி. கூறியதாவது:-
கொரோனா காலத்தில் ஆட்சியில் இருந்த அ.தி.மு.க.வினர் மக்களை கண்டுகொள்ளவில்லை. அப்போது ஆட்சியில் இல்லாத தி.மு.க.வினர் தான் மு.க.ஸ்டாலினின் உத்தரவுப்படி பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை செய்தனர். மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக பதவியேற்றதும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட கொரோனா நோயாளிகளும் பயன் அடையும் வகையில், காப்பீடு திட்டத்தை விரிவுபடுத்தினார்.
தமிழக அரசின் நலத்திட்டங்கள் பொதுமக்களை சென்றடைய நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நமது நல்லாட்சி தொடர தி.மு.க. வேட்பாளர்களை வெற்றி பெற செய்யுங்கள்.
மீண்டும் பாடம் புகட்டுவார்கள்
தேர்தலில் தி.மு.க.விற்கு பொதுமக்கள் பாடம் புகட்டுவார்கள் என்று அ.தி.மு.க.வினர் கூறுகின்றனர். ஏற்கனவே, உங்களுக்கு (அ.தி.மு.க.வினருக்கு) பொதுமக்கள் பாடம் புகட்டி எதிர்க்கட்சியாக்கி விட்டனர். தற்போது நடைபெற உள்ள தேர்தலிலும் மீண்டும் பாடம் புகட்டுவார்கள். கியாஸ் சிலிண்டர் விலை குறைப்பு எப்போது என்று கேட்கிறீர்கள். கியாஸ் சிலிண்டர் விலையை குறைப்பது மத்திய அரசிடமே உள்ளது. இதுதொடர்பாக பிரசாரத்திற்கு வரும் பா.ஜனதாவினரிடம் கேளுங்கள்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொழில் அமைப்புகளிடம் இருந்து ஏராளமான முதலீடுகளை பெற்று வந்துள்ளார். அதில் பெரும் பகுதி தென்மாவட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு, தொழிற்சாலைகள் ஏற்படுத்தப்படும். நமது பகுதி இளைஞர்களுக்கு நமது பகுதியிலேயே வேலைவாய்ப்புகள் உருவாக்கி தரப்படும்.
பாபநாசத்தில் படகு சவாரி
பாபநாசத்தில் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு சுற்றுலா மேம்படுத்தப்படும். காரையாறு சின்னமயிலாற்றில் இரும்பு பாலம் அமைக்கப்படும். பாபநாசம் அணையில் படகு சவாரி மீண்டும் விட நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு கனிமொழி எம்.பி பேசினார்.
பிரசாரத்தில் தி.மு.க. மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன், கணேஷ்குமார் ஆதித்தன், ஒன்றிய செயலாளர்கள் பரணி சேகர், ராஜன், செல்வகருணாநிதி, முத்துப்பாண்டி என்ற பிரபு, ராஜகோபால், யூனியன் தலைவர் இந்திரா ஜார்ஜ்கோசல், சேரன்மாதேவி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பூங்கோதை குமார், சேரன்மாதேவி நகர செயலாளர் மனிஷா செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.