தமிழகத்தில் மக்களின் ஆதரவுடன் ஆட்சி நடக்கிறது
சட்டசபையை முடக்க முடியாது என்றும், தமிழகத்தில் மக்களின் ஆதரவுடன் ஆட்சி நடக்கிறது எனவும் சேலத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் தி.மு.க. மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பேசினார்.
சேலம்:-
சட்டசபையை முடக்க முடியாது என்றும், தமிழகத்தில் மக்களின் ஆதரவுடன் ஆட்சி நடக்கிறது எனவும் சேலத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் தி.மு.க. மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பேசினார்.
பிரசார பொதுக்கூட்டம்
சேலம் மாநகராட்சி 60 வார்டுகளில் போட்டியிடும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசார பொதுக்கூட்டம் தாதகாப்பட்டி கேட், கோட்டை பகுதியில் நேற்று நடந்தது. இதில், தி.மு.க. மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்து பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
10 கோடி பேருக்கு தடுப்பூசி
கடந்த 10 ஆண்டுகளாக நடந்த அ.தி.மு.க. ஆட்சியில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. ஆனால் தி.மு.க. ஆட்சிக்கு வந்த 9 மாதத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படுகிறது.
தி.மு.க. ஆட்சிக்கு வந்தபோது, கொரோனா 2-ம் அலை மிகவும் ஆபத்தான நிலையில் இருந்தது. ஆனால் முதல்-அமைச்சரின் நடவடிக்கையால் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டது. அ.தி.மு.க. ஆட்சியில் ஒரு கோடி பேருக்கு மட்டுமே தடுப்பூசியை செலுத்தினார்கள்.
கொரோனா காலத்திலும் அ.தி.மு.க. அரசு கொள்ளையடித்தது. ஆனால் தி.மு.க. ஆட்சிக்கு வந்து 9 மாதத்தில் பொதுமக்களிடம் போதுமான விழிப்புணர்வை ஏற்படுத்தி இதுவரை 10 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதனால் கொரோனா 3-வது அலையை எதிர்கொண்டாலும் மிகப்பெரிய இழப்பு தடுக்கப்பட்டது.
மகளிர் உரிமைத்தொகை
அ.தி.மு.க. ஆட்சியை விட்டு செல்லும்போது கஜானாவை காலி செய்துவிட்டு சென்றார்கள். அதாவது 5¾ லட்சம் கோடி ரூபாய் கடனில் இருந்தது. இருப்பினும், தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதியான கொரோனா நிவாரண தொகை ரூ.4,000-ஐ முதல்-அமைச்சர் கொடுத்தார். அதுமட்டுமின்றி அரசு பஸ்சில் பெண்களுக்கு இலவச பயணம், ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 குறைப்பு, பெட்ரோல் லிட்டருக்கு ரூ.3 குறைப்பு, மகளிர் சுயஉதவிக்குழு கடன் தள்ளுபடி என பல்வேறு வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
மேலும் மகளிர் உரிமைத்தொகை ரூ.1,000 வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார். உள்ளாட்சி தேர்தல் முடிந்தவுடன் விரைவில் மாதம் ஆயிரம் வீதம் ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம் மகளிருக்கு வழங்கப்படும். இல்லம் தேடி கல்வி திட்டம், மக்களை தேடி மருத்துவம் போன்ற திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறோம்.
சசிகலாவின் காலில் விழுந்து...
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழக சட்டசபையை முடக்குவேன் என கூறி வருகிறார். முடிந்தால் அதை செய்து பாருங்கள். உங்களை மாதிரி, கூவத்தூரில் நாற்காலிக்கு அடியில் சசிகலாவின் காலில் விழுந்து முதல்-அமைச்சராக வரவில்லை.
சட்டசபை தேர்தலில் தமிழக மக்களின் ஆதரவுடன் தி.மு.க. ஆட்சி நடந்து வருகிறது. எடப்பாடி பழனிசாமிக்கு என் மீது தனி பாசம் உள்ளது. தேர்தல் நேரத்தில் உதயநிதி ஸ்டாலின் பொய்யான வாக்குறுதிகளை அளித்துவிட்டு தற்போது அவர் காணாமல் போய்விட்டதாக கூறுகிறார். நான் தினமும் மக்களை சந்தித்து கொண்டு தான் இருக்கிறேன்.
நீட் தேர்வு ரத்து சிறப்பு தீர்மானத்தின்போது அவருக்கு எதிரே தான் அமர்ந்திருந்தேன். நாற்காலிக்கு அடியில் பார்த்தால் தெரியாது. நாற்காலிக்கு மேலே பார்த்திருந்தால் தெரியும். தி.மு.க. ஆட்சி இன்னும் 27 அமாவாசைகள் நீடிக்கும் என்று கூறுகிறார். தமிழகத்தில் 2 அமாவாசைகள் இருந்தார்கள். அவர்கள் யார்? என்பது உங்களுக்கு நன்றாக தெரியும்.
பா.ஜ.க.வின் அடிமை
தமிழகத்தில் தி.மு.க. இருக்கும் வரை பா.ஜனதாவால் கால் வைக்க முடியாது என்று பிரதமர் மோடியின் முன்னிலையில் நாடாளுமன்றத்தில் ராகுல்காந்தி பேசினார். பா.ஜ.க.வின் அடிமையாக அ.தி.மு.க. உள்ளது.
தேர்தலில் வாக்களித்த மக்களுக்கு மட்டும் இல்லை, வாக்களிக்காத மக்களுக்கும் சேர்த்து எனது பணி இருக்கும் என்று முதல்-அமைச்சர் கூறியுள்ளார். எனவே, அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும். தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ளன. தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு பொதுமக்கள் வாக்களிக்க வேண்டும்.
இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
இந்த கூட்டத்தில், தமிழக நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு, கட்சியின் சேலம் மத்திய மாவட்ட செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., மேற்கு மாவட்ட பொறுப்பாளர் டி.எம்.செல்வகணபதி, கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம், எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி. உள்பட பலர் கலந்து கொண்டனர்.