அரசு பஸ் மோதி 2 பேர் பலி

அரசு பஸ் மோதி 2 பேர் பலி

Update: 2022-02-16 18:48 GMT
மதுரை
மதுரை சிலைமான் அருகே மோட்டார் சைக்கிள்களில் சென்ற 2 பேர் அரசு பஸ் மோதி பலியாகினர். மேலும் இந்த விபத்தில் வயிற்றில் இருந்த கன்றுக்குட்டியுடன் பசுமாடும் செத்தது.
2 பேர் சாவு
மதுரையில் இருந்து நேற்று இரவு ராமநாதபுரம் மாவட்டம் கமுதி நோக்கி அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. சிலைமான் அருகே பஸ் சென்றபோது திடீரென்று பசுமாடு ஒன்று சாலையை கடக்க முயன்றது. இதைப் பார்த்த டிரைவர் உடனடியாக பிரேக் பிடித்தார். இதனால் கட்டுப்பாட்டை இழந்த பஸ் அந்த பசுமாடு மீது மோதியது. மேலும் நிற்காமல் சென்ற பஸ் முன்னாள் சென்ற 2 மோட்டார் சைக்கிள்களில் மீதும் மோதியது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற திருமங்கலத்தை சேர்ந்த லாரி டிரைவர் மணிமாறன்(வயது 52) சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து வந்த அவரது மகன் ராஜ்குமார்(25) படுகாயம் அடைந்தார்.
மற்றொரு மோட்டார் சைக்கிளில் சென்ற திருப்புவனத்தை சேர்ந்த ரவீந்திரன் (50) என்பவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
பசு, கன்றுக்குட்டி
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சிலைமான் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் விபத்து நடந்த பகுதியில் மீட்பு பணிகளை மேற்கொண்டனர். மேலும் படுகாயத்துடன் இருந்த ராஜ்குமாரை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பஸ் மோதியதில் பசுமாடும் சம்பவ இடத்திலேயே இறந்தது. மேலும் அதன் வயிற்றில் இருந்த கன்றுக்குட்டி இறந்த நிலையில் வெளியே கிடந்தது.
இந்த சம்பவம் குறித்து சிலைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இரவு நேரத்தில் நடந்த இந்த விபத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்