3 நாட்கள் விடுமுறை என்பதால் டாஸ்மாக் கடைகளில் அலைமோதிய ‘குடி’மகன்கள் கூட்டம்
தேர்தலையொட்டி 3 நாட்கள் விடுமுறை என்பதால் டாஸ்மாக் கடைகளில் குடிமகன்கள் கூட்டம் அலைமோதியது.
வேலூர்
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நாளை மறுதினம் (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. இதையொட்டி இன்று (வியாழக்கிழமை) முதல் வருகிற 19-ந் தேதி வரை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 3 நாட்கள் தொடர்ச்சியாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருக்கும் என்பதால் வேலூர் மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளின் முன்பு ‘குடி’மகன்கள் கூட்டம் அலைமோதியது.
குறிப்பாக மாலை மற்றும் இரவு நேரத்தில் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் வழக்கத்தை விட மிகவும் அதிகமாக காணப்பட்டது. பல கடைகளில் நீண்ட வரிசையில் மதுபிரியர்கள் காத்து நின்றதை காண முடிந்தது. 3 நாட்களுக்கு தேவையான மது, பீர்வகைகளை உற்சாகமாக வாங்கி அட்டை பெட்டிகளில் கொண்டு சென்றனர். அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் கூடுதலாக மது, பீர்வகைகள் இருப்பு வைக்கப்பட்டிருந்தன. அவற்றில் பெரும்பாலான கடைகளில் சரக்கு விற்று தீர்ந்தன.