பரிமள ரங்கநாதப்பெருமாளுக்கு தீர்த்தவாரி

மாசி மகத்தையொட்டி பூம்புகார் கடலில் பரிமள ரங்கநாதப் பெருமாளுக்கு தீர்த்தவாரி நடந்தது.

Update: 2022-02-16 18:37 GMT
திருவெண்காடு:
மயிலாடுதுறையில் மிகவும் பிரசித்தி பெற்ற பரிமள ரங்கநாதபெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவில் 108 வைணவ திவ்ய தேச பெருமாள் கோவில்களில் ஒன்றாக விளங்குகிறது. மாசி மகத்தையொட்டி நேற்று முன்தினம் மாலை புறப்பாடு செய்த பரிமள ரங்கநாயகி தாயார் சமேத பரிமள ரங்கநாதப்பெருமாள் மேள தாளம் முழங்கிட பக்தர்களால் 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பூம்புகார் கடற்கரைக்கு நேற்று அதிகாலை பல்லக்கில் கொண்டுவரப்பட்டார். காவிரி கடலோடு கலக்கும் சங்கமத்துறையில் பெருமாளுக்கு சிறப்பு வழிபாடுகள் நடந்தன. இதனையடுத்து கடலில் தீர்த்தவாரி செய்தார். அப்போது அங்கு கூடியிருந்த திரளான பக்தர்கள் நாராயணா நாராயணா என்று கோஷமிட்டபடி புனித நீராடினார்கள். பின்னர் மலர் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.
இதனையடுத்து பூம்புகார் ராஜநாராயண பெருமாள் கோவிலுக்கு வந்தடைந்த பெருமாளுக்கு பொதுமக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். அங்கு சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டு, மீண்டும் மயிலாடுதுறை நோக்கி பெருமாள் புறப்பட்டு சென்றார். அப்போது வழியெங்கும் திரளான பக்தர்கள் தேங்காய் உடைத்தும், பட்டு வஸ்திரம் வழங்கியும் நேர்த்திக்கடன் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்