தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டி

Update: 2022-02-16 18:33 GMT
எரியாத விளக்கு 
நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட ஆளூர் பகுதியில் தைக்கா தெரு உள்ளது. இந்த தெருவில் சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள ஒரு மின்கம்பத்தில் விளக்கு பழுதடைந்து எரியாமல் உள்ளது. இதனால், இரவு நேரம் அந்த வழியாக செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். எனவே, பாதசாரிகள் நலன்கருதி பழுதடைந்த மின்விளக்கை அகற்றி விட்டு புதிய விளக்கை பொருத்தி எரியவைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 
                                                               -அ.ஜகுபர் சாதிக். ஆளூர்.
விபத்து அபாயம்
ஆரல்வாய்மொழி கணேசபுரத்தில் அரசு தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளிகளின் அருகில் உள்ள தெருவில் பேரூராட்சி சார்பில் வீடுகளுக்கு குடிநீர் வினியோகம் செய்வதற்கான வால்வு அமைந்துள்ள சிறு தொட்டி உள்ளது. இதை முறையாக பராமரிக்காததால் அதன் சிமெண்டு சிலாப்புகள் உடைந்து செடிகள் வளர்ந்தும் காணப்படுகிறது. சிலர் குப்பைகளையும் கொட்டி வருகின்றனர். இதனால், இரவு நேரம் அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் விபத்தில் சிக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே, தொட்டியில் வளர்ந்துள்ள செடிகளை அகற்றி புதிய சிலாப்புகள் அமைத்து விபத்தை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
                                                       -தமிழரசு, ஆரல்வாய்மொழி.
விவசாயிகள் அவதி
தக்கலை அருகே உள்ள இளஞ்சிறை பகுதியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் கீழ் செயல்படும் ரேஷன் கடை உள்ளது. இந்த கடையானது விளை பொருள் சேமிப்பு கிடங்கு கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. இதனால், விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை அங்கு வைக்க முடியாமல் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விவசாயிகள் நலன் கருதி ரேஷன் கடையை அதற்கான கட்டிடத்துக்கு மாற்றி விளை பொருட்களை சேமித்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
                                                                   -பினோ, இளஞ்சிறை.
சுகாதார சீர்கேடு
நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட வடசேரி பகுதியில் புளியவிளை தெரு உள்ளது. இந்த குறுக்கு தெரு பாதையில் இரவு நேரம் மது பிரியர்கள் பாட்டில்களை வீசி உடைத்து விட்டு செல்வதால், கண்ணாடி துண்டுகள் சிதறி கிடப்பதுடன், துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். எனவே, தூய்மை பணியாளர்களை கொண்டு பாதையை சுத்தப்படுத்துவதுடன், மது பிரியர்கள் மீதும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
                                                   -காயத்ரி, ஜெயப்பிரகாஷ், வடசேரி.  
மரத்தை அகற்ற வேண்டும்
வேர்க்கிளம்பி பேரூராட்சிக்கு உட்பட்ட பூவன்கோட்டில் இருந்து வெட்டுக்குழி செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையோரத்தில் பட்டுப்போன பெரிய மரம் ஒன்று எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழும் நிலையில் காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பட்டுப்போன மரத்தை வெட்டி அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். 
                     -ஆர்.சந்திரசேகர், கன்றுபிலாவிளை, குமாரபுரம்.
வீணாகும் மின்சாரம்
நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட 26-வது வார்டு கரியமாணிக்கபுரத்தில் உள்ள ஒரு படிப்பகத்தில் இருந்து முப்பிடாரி அம்மன் கோவில் வரை சாலையோரத்தில் மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மின்கம்பங்களில் அமைக்கப்பட்டுள்ள விளக்குகள் இரவு- பகல் என ஓய்வில்லாமல் எரிந்து கொண்டிருப்பதால் மின்சாரம் வீணாகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விளக்குகளை சரியான நேரத்துக்கு எரிய வைத்து காலையில் அவற்றை அனைத்து மின்சார இழப்பை தடுக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
                                              -பி.உலகப்பன், கரியமாணிக்கபுரம்.

மேலும் செய்திகள்