அ.தி.மு.க.வேட்பாளர் உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு
கோவை பீளமேட்டில் பரிசு பொருட்கள் கொண்டு செல்வதாக கூறி கார் டிரைவரை தாக்கிய அ.தி.மு.க. வேட்பாளர் உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
கோவை
கோவை பீளமேட்டில் பரிசு பொருட்கள் கொண்டு செல்வதாக கூறி கார் டிரைவரை தாக்கிய அ.தி.மு.க. வேட்பாளர் உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
டிரைவர் மீது தாக்குதல்
கோவை பீளமேடு ஹட்கோ காலனியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 49). கார் டிரைவர். இவர் சம்பவத்தன்று தனது காரில் பீளமேட்டில் இருந்து மசக்காளிபாளையம் செல்லும் சாலையில் ராமநாதபுரத்தை நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அப்போது அங்குள்ள தனியார் மருத்துவமனை அருகே இவரது காரை மாநகராட்சி 52-வது வார்டு அ.தி.மு.க. வேட்பாளர் உலகநாதன் உள்பட சிலர் வழிமறித்தாக தெரிகிறது.
பின்னர் அவர்கள் காரில் இருந்த செந்தில்குமாரிடம், வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பரிசுப்பொருட்களை காரில் எடுத்து செல்கிறாயா? என்று கேட்டு தகராறில் ஈடுபட்டு உள்ளனர். ஆனால் அவர் பரிசு பொருட்கள் எதுவும் காரில் இல்லை என்று கூறினார்.
இருப்பினும் அவர்கள், டிரைவர் செந்தில் குமாரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த அவர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இதனிடையே செந்தில்குமார் அளித்த புகாரின் பேரில் பீளமேடு போலீசார் அ.தி.மு.க. வேட்பாளர் உலகநாதன், ராஜூவ், நாகராஜ், சீனிவாசன், வெள்ளிங்கிரி, கண்ணன் ஆகிய 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில் நாகராஜ் என்பவரை மட்டும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கார் கண்ணாடி உடைப்பு
இதேபோல் கோவை சிங்காநல்லூர் வசந்தா மில் காலனியை சேர்ந்த பாலாஜி (34) என்பவர் காரில் பீளமேடு நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது ஒரு கும்பல் காரை வழிமறித்ததுடன், காரில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பரிசு பொருட்கள் உள்ளதா என்று கேட்டு தகராறில் ஈடுபட்டனர்.
மேலும் அந்த கும்பல் ஆத்திரத்தில் கார் கண்ணாடியை உடைத்து, டிரைவர் பாலாஜியை தாக்கினர். இதில் காயமடைந்த அவர் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்த புகாரின் பேரில் கோவை எஸ்.ஐ.எச்.எஸ். காலனியை சேர்ந்த சுபம் மணிகண்டன், கோவில்பாளையத்தை சேர்ந்த மனோஜ், பீளமேடு பகுதியை சேர்ந்த துரைசாமி, பீளமேடு புதூரை சேர்ந்த வேல்முருகன் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில் வேல்முருகன் (34) என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.