2 ஆண்டுகளுக்கு பிறகு நர்சரி பள்ளிகள் திறப்பு

கடலூர் மாவட்டத்தில் சுமார் 2 ஆண்டுகளுக்கு பிறகு நர்சரி பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. இதையடுத்து, மழலை செல்வங்கள் உற்சாகமாக மகிழ்ச்சியுடன் தங்கள் வகுப்புகளுக்கு வந்தனர்.

Update: 2022-02-16 16:48 GMT
கடலூர், 

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு பள்ளிகள் மூடப்பட்டன. அதன்பிறகு கொரோனா பரவல் குறைந்த நிலையில், பள்ளிகள் திறக்கப்பட்டன. பின்னர் கடந்த ஆண்டு மீண்டும் 2-வது அலை வீசியதால் பள்ளிகள் மூடப்பட்டன. தற்போது நோய்த்தொற்று குறைந்து வருவதால் 1 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக நர்சரி மற்றும் மழலையர் பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு நர்சரி பள்ளிகள் (எல்.கே.ஜி., யு.கே.ஜி.) மற்றும் மழலையர் விளையாட்டு பள்ளிகள் 16-ந் தேதி (நேற்று) முதல் திறக்கப்படும் என்று அரசு அறிவித்தது 

2 ஆண்டுகளுக்கு பிறகு நர்சரிகள் திறப்பு

அதன்படி, தமிழகம் முழுவதும் சுமார் 2 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று நர்சரி மற்றும் மழலையர் விளையாட்டு பள்ளிகள் திறக்கப்பட்டன. அந்த வகையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள மழலையர் பள்ளிகளும் நேற்று திறக்கப்பட்டன. நேற்று முன்தினம் வரை சுமார் 2 ஆண்டுகளாக வீடுகளில் முடங்கி கிடந்த மழலைச்செல்வங்கள் தாங்கள் பள்ளிக்கு செல்வதை ஆர்வமுடன் எதிர்பார்த்து இருந்த நிலையில், நேற்று புத்தாடை சகிதம் புத்தகப்பையுடன் பள்ளிக்கு மிகவும் ஆர்வமாக மழலை செல்வங்கள் வந்தன.

பெற்றோருடன் பள்ளிக்கு வந்த மழலைகளை ஆசிரியர்கள் மற்றும் மூத்த மாணவர்கள் பூக்கள் மற்றும் இனிப்புகள் வழங்கி உற்சாகமாக வரவேற்றனர். பெற்றோரும் தங்கள் பிள்ளைகளுக்கு அன்பு முத்தம் அளித்தும், பாசமாக பருகுவதற்கு தண்ணீர் கொடுத்தும், முகத்தில் முககவசத்தை ஒழுங்காக அணிவித்தும் வகுப்பறைக்கு அனுப்பி வைத்தனர்.

பாசப் போராட்ட காட்சிகள்

எனினும், பள்ளிக்கு எப்போது செல்வோம் என்று காத்திருந்த மழலைகள் பெற்றோருடன் உற்சாகமாக பள்ளிக்கு வந்த போதிலும், அதில் பல குழந்தைகள் பள்ளியின் வாசலில் இருந்து வகுப்புக்கு செல்ல மறுத்து அழத்தொடங்கின. அந்த குழந்தைகளை பெற்றோர் சமாதானப்படுத்தி வகுப்பறைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் இடையே பல்வேறு சுவையான பாசப்போராட்ட காட்சிகள் அரங்கேறின.
பல மழலைகள் வகுப்பறையிலும் தங்களின் அழுகையை நிறுத்தாமல் அழுததையும் பார்க்க முடிந்தது. அவர்களை வகுப்பு ஆசிரியர்கள் இனிப்புகளை வழங்கியும், பல்வேறு சமாதானங்களை தெரிவித்தும் அழுகையை நிறுத்தினர். நீண்ட நாட்களுக்கு பிறகு பள்ளியில் மழலைச்செல்வங்களை பார்ப்பது தங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக நர்சரி பள்ளி ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

ஒருவழியாக, சுமார் 2 ஆண்டுகளுக்கு பிறகு வீடுகளில் முடங்கிக் கிடந்த மழலைச்செல்வங்கள் பள்ளிக்கு சென்றது பெற்றோர் - குழந்தைகள் மட்டும் அல்லாமல் நர்சரி பள்ளி ஆசிரியர்களுக்கும் மகிழ்ச்சியை வழங்கியது என்று கூறினால் அது மிகையாகாது.
இருப்பினும் ஒரு சில தனியார் பள்ளிகளில் வருகிற 21-ந்தேதி (திங்கட்கிழமை) முதல் மழலையர் பள்ளிகளை திறக்க உள்ளதாக அறிவித்துள்ளனர்.
---

மேலும் செய்திகள்