நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒத்திகை நிகழ்ச்சி
தலைஞாயிறு பேரூராட்சியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.
வாய்மேடு:-
தலைஞாயிறு பேரூராட்சியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்
நாகை மாவட்டம் தலைஞாயிறு பேரூராட்சியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடக்கிறது. இதை முன்னிட்டு உள்ளாட்சி தேர்தல் ஒத்திகை நிகழ்ச்சி தலைஞாயிறு பேரூராட்சியில் நடந்தது.
இதில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் இருந்து வாக்குச்சாவடிக்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் உள்ளிட்ட கருவிகளை பெற்று வாக்குச்சாவடிகளில் ஒப்படைப்பது. தேர்தல் முடிந்தபின் வாக்குச்சாவடி தலைமை அலுவலரிடம் இருந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை சரிபார்த்து திரும்பப்பெற்று வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஒப்படைப்பது உள்ளிட்ட பணிகள் தொடர்பான ஒத்திகையில் அலுவலர்கள் ஈடுபட்டனர்.
அலுவலர்கள் பங்கேற்பு
இந்த நிகழ்ச்சிக்கு தலைஞாயிறு பேரூராட்சியில் தேர்தல் நடத்தும் அலுவலரும், செயல் அலுவலருமான குகன் தலைமை தாங்கினார். பேரூராட்சியில் உள்ள 15 வாக்குச்சாவடிகளுக்கு எந்த வழித்தடத்தில் சென்று, எந்த வழித்தடம் வழியாக திரும்புவது என ஒத்திகை பார்க்கப்பட்டது. மேலும் வாக்குப்பதிவு குறித்து மின்னணு எந்திரம் மூலமாக ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது.
நிகழ்ச்சியில் மண்டல அலுவலர் பாலமுருகன், உதவி மண்டல அலுவலர் கொளஞ்சிராஜன் மண்டல உதவியாளர் மணிவண்ணன், தேர்தல் பிரிவு உதவியாளர் குமார், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.