வங்கி மேலாளரின் கார் கண்ணாடியை உடைத்து 10 பவுன் நகை திருடியவர் கைது
வங்கி மேலாளரின் கார் கண்ணாடியை உடைத்து 10 பவுன் நகை திருடியவர் கைது
காங்கேயத்தில் துக்க நிகழ்ச்சிக்கு வந்த வங்கி மேலாளரின் கார் கண்ணாடியை உடைத்து 10 பவுன்நகை மற்றும் 3 மடிக்கணினிகளை திருடியவரை போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது
நகை திருட்டு
கரூர் மாவட்டம் லாலாபேட்டையை சேர்ந்தவர் கார்த்திக் சென்னையில் உள்ள தனியார் வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 7-ந்தேதி காங்கேயம் கரூர் சாலையில் உள்ள அவரது உறவினர் வீட்டு துக்க நிகழ்விற்கு தனது மனைவியுடன் காரில் வந்தார். பின்னர் மனைவியின் நகைகளை காரில் வைத்துவிட்டு காரை சாலையோரத்தில் நிறுத்தி விட்டு துக்க வீட்டுக்குச் சென்றதாக கூறப்படுகிறது.
பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது காரின் பின்பக்க கண்ணாடி உடைக்கப்பட்டிருந்தது. காரை திறந்து பார்த்த போது காரில் வைக்கப்பட்டிருந்த 10 பவுன் நகை, 3 மடிக்கணினிகள் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து காங்கேயம் போலீசில் கார்த்திக் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருடிய நபரை தேடிவந்தனர்.
கைது
இந்த நிலையில் நேற்று முன்தினம் காங்கேயம் பஸ் நிலையத்தில் பெரிய பையுடன் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் சுற்றித்திரிந்த நபரை பிடித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில் அவர் திருச்சி மாவட்டம் ராம்ஜி நகர் சோமரசம்பேட்டையை சேர்ந்த வின்சென்ட் என்பதும், கடந்த 7 ந்தேதி காங்கேயம், கரூர் சாலையில் சாலையோரத்தில் நிறுத்தி இருந்த கார்த்திக்கின் கார் கண்ணாடியை உடைத்து 10 பவுன் நகை மற்றும் 3 மடிக்கணினிகளை திருடியது தெரியவந்தது. இதையடுத்து வின்சென்டை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 10 நகை மற்றும் 3 மடிக்கணினிகளை பறிமுதல் செய்தனர்.
---