கல்லூரி மாணவியிடம் 3 பவுன் சங்கிலி பறிப்பு
தூத்துக்குடியில் கல்லூரி மாணவியிடம் 3 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற 2 மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் கல்லூரி மாணவியிடம் 3 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற 2 மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
கல்லூரி மாணவி
தூத்துக்குடி பக்கிள்புரம் 2-வது தெருவை சேர்ந்தவர் முத்து. இவருடைய மகள் சங்கீதா (வயது 20). இவர் தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் மாலையில் கல்லூரி முடிந்து வீட்டுக்கு நடந்து சென்று கொண்டு இருந்தார். இவர் முனியசாமிபுரம் ரோட்டில் சென்று கொண்டு இருந்த போது, அங்கு மொபட்டில் வந்த 2 மர்ம நபர்கள் திடீரென சங்கீதா கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு சென்று விட்டார்களாம்.
விசாரணை
இதனால் அதிர்ச்சி அடைந்த சங்கீதா, தூத்துக்குடி தென்பாகம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். தொடர்ந்து வழிப்பறியில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.