‘ஹிஜாப்’ விவகாரத்தில் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்த சிறுமிகளின் விவரங்களை வெளியிட்ட பா.ஜனதா

ஹிஜாப் விவகாரத்தில் வழக்கு தொடர்ந்த மாணவிகள் குறித்த விவரங்களை பா.ஜனதா தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டது. பின்னர் இதற்கு எதிர்ப்பு கிளம்பியதால் அதிரடியாக பதிவை நீக்கியது.

Update: 2022-02-15 20:55 GMT
பெங்களூரு: கர்நாடகத்தில் முஸ்லிம் மாணவிகள் பள்ளி, கல்லூரிகளுக்கு ஹிஜாப் அணிந்து செல்ல எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து உடுப்பியை சேர்ந்த 6 மாணவிகள் ஹிஜாப் அணிந்து செல்ல அனுமதி கேட்டு கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். 

இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், வழக்கு தொடர்ந்த 6 மாணவிகளில் 5 சிறுமிகளின் பெயர்கள், வீட்டு முகவரிகள் உள்ளிட்ட விவரங்கள் கர்நாடக பா.ஜனதா கட்சியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டு இருந்தன. அத்துடன், ஹிஜாப் விவகாரத்தில் வழக்கு தொடர்ந்தவர்களில் 5 பேர் மைனர்கள். 

மைனர் பெண்களை அரசியல் லாபத்திற்காக பயன்படுத்துவதால் சோனியா காந்தி, ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோருக்கு எந்த குற்ற உணர்ச்சியும் இல்லையா?, தேர்தலில் வெற்றி பெற எவ்வளவு கீழ்த்தரமான செயல்களை செய்கிறீர்கள் என்று ஆங்கிலம் மற்றும் கன்னடத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தது.  இந்த டுவிட்டர் பதிவுக்கு சிவசனோ எம்.பி. பிரியங்கா சதுர்வேதி கடும் கண்டனம் தெரிவித்தார். 

மேலும் சிறுமிகளின் பெயர்கள், முகவரியை பகிர்வது ஒரு கிரிமினல் செயல். இதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த விவகாரத்தில் கர்நாடக டி.ஜி.பி. தலையிட வேண்டும். தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். 

மேலும் ஹிஜாப் விவகாரத்தில் வழக்கு தொடர்ந்த சிறுமிகளின் விவரங்களை வெளியிட்ட கர்நாடக பா.ஜனதாவுக்கு கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்தனர். இதையடுத்து பா.ஜனதாவின் டுவிட்டர் பக்கத்தில் இருந்து அந்த பதிவு நீக்கப்பட்டது. 

மேலும் செய்திகள்