“நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும்”- ஓ.பன்னீர் செல்வம் பேச்சு
“தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர். இதனால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும்” என்று நெல்லையில் நேற்று நடந்த பிரசாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
நெல்லை:
“தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர். இதனால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும்” என்று நெல்லையில் நேற்று நடந்த பிரசாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
ஓ.பன்னீர்செல்வம் பிரசாரம்
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் அறிமுக மற்றும் பிரசார கூட்டம் நெல்லையில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு நெல்லை மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமை தாங்கினார். தென்காசி மாவட்ட செயலாளர்கள் செல்வமோகன்தாஸ் பாண்டியன், கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
பொய்யான வாக்குறுதிகள்
1972-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை தொடங்குவதற்கு அடித்தளமாகவும், அச்சாரமாகவும் இருந்தது திருநெல்வேலி தான். அ.தி.மு.க. தமிழகத்தில் 30 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்து உள்ளது. அப்போது மக்களுக்கு தேவையான ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி உள்ளது. திருமண உதவித்தொகை மற்றும் தாலிக்கு தங்கம், படிக்கின்ற மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி மற்றும் கல்வி உபகரணங்கள், இலவச கல்வி ஆகியவை வழங்கப்பட்டது. கல்விக்கு அதிக நிதி ஒதுக்கியதால் இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் பட்டதாரிகளின் எண்ணிக்கை 52 சதவீதமாக உயர்ந்துள்ளது.
2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெறும் நிலை இருந்தது. ஆனால், தி.மு.க.வினர் பல பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து மக்களை நம்ப வைத்து ஆட்சிக்கு வந்து விட்டனர்.
நீட் தேர்வு
மு.க.ஸ்டாலின் தான் முதல்-அமைச்சரானால் நீட் தேர்வை ரத்து செய்வதற்குதான் முதல் கையெழுத்து என்று அறிவித்தார். ஆனால் அதை செய்யாமல் ஏமாற்றி விட்டார். மேலும் பெண்களுக்கு ரூ.1,000, கல்விக்கடன் ரத்து, 100 நாள் வேலை 150 நாளாக உயர்வு என்று எதையும் செய்யவில்லை. 5 பவுன் தங்கத்துக்கு குறைவாக கூட்டுறவு வங்கியில் அடகு வைத்தவர்களுக்கு அந்த தொகையை ரத்து செய்வோம் என்று தெரிவித்தார். 50 லட்சம் பேர் நகைக்கடன் பெற்றிருந்தனர். அதில் ஆய்வு நடத்தி 13 லட்சம் பேர் தான் தகுதியானவர்கள் என்று கூறி 37 லட்சம் பேரை கடனாளியாக்கி விட்டனர்.
இதுகுறித்து தேர்தல் பிரசாரத்தின்போது உதயநிதி ஸ்டாலினிடம் மக்கள் கேட்டனர். அதற்கு அவர், இன்னும் 4 ஆண்டுகள் ஆட்சி இருக்கிறது. அப்போது இந்த வாக்குறுதியை நிறைவேற்றுவோம் என்று கூறுகிறார். இன்னும் 4 வருடம் தி.மு.க. அரசால் துன்பம், துயரத்தை மக்கள் அனுபவிக்க வேண்டும் என்பதை மறைமுகமாக அவர் கூறி சென்றுவிட்டார்.
அமோக வெற்றி
அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை தான் தி.மு.க. அரசு தற்போது நிறைவேற்றி வருகிறது. புதிதாக எந்த திட்டங்களையும் அவர்கள் கொண்டு வரவில்லை. தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் அவர்கள் மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர். இதனால் உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும். இந்த தேர்தலில் தொண்டர்கள் தான் நிற்கிறார்கள். அவர்களை வெற்றி பெற செய்ய அனைவரும் பாடுபட வேண்டும்.
இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
இதைத்தொடர்ந்து அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:- எதிர்க்கட்சி முதல்-அமைச்சர்கள் மாநாட்டுக்கு மம்தா பானர்ஜி, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்துள்ளாரே?
பதில்:- மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வந்து 10 மாதங்கள் ஆகிறது. அவர் தேர்தலில் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டு அகில இந்திய அரசியலில் கால் பதிக்கட்டும்.
கேள்வி:- நெல்லையில் தேர்தல் பிரசாரம் செய்த உதயநிதி ஸ்டாலின், சட்டமன்றத்தை முடக்கினால் 200 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம் என்று கூறி உள்ளாரே?
பதில்:- அது அவருடைய ஆசையாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கலந்து கொண்டவர்கள்
கூட்டத்தில், அமைப்பு செயலாளர்கள் கருப்பசாமி பாண்டியன், மனோஜ்பாண்டியன் எம்.எல்.ஏ., இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ., அ.தி.மு.க. சட்ட ஆலோசனைக்குழு உறுப்பினரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ஐ.எஸ்.இன்பதுரை, முன்னாள் அமைச்சர் ராஜலட்சுமி, முன்னாள் எம்.பி.க்கள் முத்துக்கருப்பன், கே.ஆர்.பி.பிரபாகரன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ஆர்.பி.ஆதித்தன், மனோகரன், ரெட்டியார்பட்டி நாராயணன், அமைப்பு செயலாளர்கள் ஏ.கே.சீனிவாசன், கொள்கை பரப்பு துணைச்செயலாளர் பாப்புலர் முத்தையா, ஜெயலலிதா பேரவை செயலாளர் ஜெரால்டு, துணை செயலாளர் டென்சிங் சுவாமிதாஸ், இளைஞரணி செயலாளர் பால்துரை, எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பெரியபெருமாள், மகளிர் அணி செயலாளர் ஜான்சிராணி, முன்னாள் துணைமேயர் ஜெகநாதன் என்ற கணேசன், கல்லூர் வேலாயுதம், எம்.ஜி.ஆர். மன்ற துணைச்செயலாளர் நாராயணபெருமாள், ஒன்றிய செயலாளர்கள் அந்தோணி அமல்ராஜ், கே.பி.கே.செல்வராஜ், விஜயகுமார், முன்னாள் கவுன்சிலர் ஆறுமுகம், நெல்லை மாநகராட்சி வேட்பாளர்கள் அமுதாசுந்தர், பால்கண்ணன், பிச்சைராஜ், புஷ்பராஜ் ஜெய்சன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.