வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க டோக்கன் வினியோகமா?- தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனை
நெல்லையில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க டோக்கன் வினியோகம் செய்யப்பட்டதா? என்பது குறித்து தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனை நடத்தினர்.
நெல்லை:
நெல்லையில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க டோக்கன் வினியோகம் செய்யப்பட்டதா? என்பது குறித்து தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனை நடத்தினர்.
பறக்கும் படையினர் சோதனை
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந்தேதி நடக்கிறது. தேர்தல் நெருங்கி வருவதால் வேட்பாளர்கள் மும்முரமாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் வேட்பாளர்கள் பொதுமக்களுக்கு பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் கொடுத்தல் உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபடுவதை தடுக்க பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
நெல்லை மாவட்டத்தில் மாநகராட்சி, நகரசபை, பேரூராட்சி பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபடுவதற்கு என்று 51 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த பறக்கும் படையினர் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
டோக்கன் வினியோகமா?
இந்த நிலையில் நேற்று காலையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி ஒருவருக்கு போனில் அழைப்பு வந்தது. அதில் பேசியவர், பாளையங்கோட்டை சிவன் கோவில் பகுதியில் பூத் சிலிப் வழங்குவது போல் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்கான டோக்கன் வினியோகம் நடைபெறுவதாக கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார்.
இதைத்தொடர்ந்து பறக்கும் படை அதிகாரி முருகப்பன் தலைமையில் அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று டோக்கன் வினியோகம் செய்யப்பட்டதா? என்று விசாரணை மேற்கொண்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
தீவிர சோதனை
ஆனால், அந்த பகுதியில் டோக்கன் வினியோகம் எதுவும் நடைபெறவில்லை என்பது தெரியவந்தது. இருந்தாலும் பறக்கும் படை அதிகாரிகள் அந்த பகுதியில் சென்ற அனைத்து வாகனங்களிலும் தீவிர சோதனை செய்தனர். ஆனால், அந்த சோதனையில் எந்த பொருட்களும் சிக்கவில்லை என்று அதிகாரிகள் கூறினர்.
ரூ.1 லட்சம்
இதற்கிடையே, நெல்லை டவுன் பகுதியில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர். அவர்களை மறித்து, மோட்டார்சைக்கிள் பெட்டியை போலீசார் சோதனையிட முயன்றனர்.
அதற்குள் அவர்கள், நாங்கள் ஆஸ்பத்திரிக்கு செல்கிறோம். அங்கு சிகிச்சை பெற்று வருகின்ற நோயாளிக்கு பணம் செலுத்த ரூ.1 லட்சம் எடுத்து வந்ததாக கூறி, அந்த பணத்தை வங்கி ஏ.டி.எம்.மில் எடுத்ததற்கான ரசீதை காண்பித்தனர். இதையடுத்து அவர்கள் பணத்தை கொண்டு செல்ல போலீசார் அனுமதித்தனர்.