குடிநீர் தொட்டி மேல் ஏறி நின்று மாணவர்கள் தற்கொலை மிரட்டல்

கல்லிடைக்குறிச்சியில் குடிநீர் தொட்டி மேல் ஏறி நின்று மாணவர்கள் தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-02-15 19:51 GMT
அம்பை:
கல்லிடைக்குறிச்சியில் குடிநீர் தொட்டி மேல் ஏறி நின்று மாணவர்கள் தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

விவசாயி
நெல்லை மாவட்டம் அம்பை அருகே உள்ள கல்லிடைக்குறிச்சி குமாரகோவில் தெருவை சேர்ந்தவர் பூவலிங்கம் (வயது 46), விவசாயி. இவருடைய மனைவி முத்துலட்சுமி. இவர்களது 2 மகன்களான பூதத்தான், சிவசண்முகம் ஆகிய இருவரும் அம்பை அருகில் உள்ள தனியார் பள்ளியில் கல்வி பயின்று வந்தனர். முதல் மகன் பூதத்தான் கடந்த ஆண்டு 10-ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
கொரோனா ஊரடங்கு காரணமாக தேர்வு நடத்தாமல் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில் அவரது மகனை பாலிடெக்னிக் கல்லூரியில் சேர்ப்பதற்காக, பூவலிங்கம் அந்த பள்ளிக்கு சென்று மகனின் மாற்றுச்சான்றிதழ், தேர்ச்சி சான்றிதழ் கேட்டுள்ளார். அப்போது தங்கள் மகன் தேர்ச்சி பெறவில்லை. இந்த ஆண்டு தேர்வு எழுதச் சொல்லுங்கள் என பள்ளி நிர்வாகம் கூறியதாக தெரிகிறது.

தற்கொலை மிரட்டல்
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பூவலிங்கம், இதுபற்றி மாவட்ட கலெக்டர் மற்றும் கல்வி அதிகாரி உள்ளிட்டோருக்கு புகார் மனு அளித்துள்ளார். இதையறிந்த பள்ளி நிர்வாகிகள், அதே பள்ளியில் 2-வது மகன் சிவசண்முகம் படிப்பதற்கும் நிபந்தனை விதித்ததாக கூறப்படுகிறது.
இதனை கண்டித்து பூவலிங்கம் தனது வீட்டின் முன்பு குடும்பத்தினருடன் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வந்தார். இந்நிலையில் பூவலிங்கம் மகன்கள் இருவரும் நேற்று காலை கல்லிடைக்குறிச்சி புதிய பஸ்நிலையம் அருகே வாரச்சந்தை வளாகத்தில் அமைந்துள்ள தண்ணீர் தொட்டியின் மீது ஏறி நின்று 10-ம் வகுப்பு தேர்ச்சி செய்யக்கோரியும், பள்ளியில் சென்று படிப்பதற்கு அனுமதி கோரியும் தற்கொலை மிரட்டல் விடுத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பேச்சுவார்த்தை
தகவல் அறிந்ததும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று சமாதானம் செய்து கீழே இறங்க வைத்தனர்.
பின்னர் இதுதொடர்பாக அம்பை தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் நெல்லை மாவட்ட கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு இசக்கி ராஜன், அம்பை துணை சூப்பிரண்டு பிரான்சிஸ், அம்பை தாசில்தார் வெற்றிச்செல்வி, கல்லிடைக்குறிச்சி இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி, அம்பை தீயணைப்பு நிலைய அதிகாரி பாலசுப்பிரமணியம் ஆகியோர் உயர் அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.

மேலும் செய்திகள்