அரசியல் கட்சியினர் போராட்டம்
அரசியல் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்
திருமயம்
திருமயம் அருகே துளையனூர் பகுதியை சேர்ந்தவர் பெருமாள் (வயது 72). அதே பகுதியை சேர்ந்தவர் ரவி(28). இருவரும் கடந்த 9-ந் தேதி மோட்டார் சைக்கிளில் பள்ளத்தூர் சென்றுவிட்டு துளையனூர் விளக்குகடை பகுதியில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி பொருட்கள் வாங்கியுள்ளனர். அப்போது வலையன்வயலைச் சேர்ந்த ராசு மகன் சதீஷ்(30) என்பவர் பெருமாளையும், ரவியையும் சாதி பெயரை சொல்லி திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கேட்க சென்ற பாண்டி (47) என்பவரையும் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த அவர்கள் 3 பேருக்கும் திருமயம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து திருமயம் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. புகாரின்பேரில், சதீஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஆனால், இதுநாள் வரை சதீஷ் கைது செய்யப்படவில்லையாம். இதனை கண்டித்தும், பெருமாள் உள்பட 3 பேரை தாக்கியவரை கைது செய்யக்கோரியும் நேற்று காலை மதுரை சாலை முகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் வீரமணி தலைமையில் கானாடு 108 கிராம ஆதிதிராவிடர் பொதுமக்கள் மற்றும் நாம் தமிழர் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் 300-க்கும் மேற்பட்டோர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த திருமயம் தாசில்தார் பிரவீனாமேரி, பொன்னமராவதி துணை போலீஸ் சூப்பிரண்டு அப்துல்ரகுமான், இன்ஸ்பெக்டர் கவுரி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது சம்பந்தப்பட்டவரை கைது செய்வதாக உறுதிஅளித்ததன்பேரில் மறியல் விலக்கி கொள்ளப்பட்டது. இந்த சாலை மறியல் காரணமாக அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து மாற்றி விடப்பட்டது.