பெண்ணிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு
பட்டுக்கோட்டையில் பெண்ணிடம் 5 பவுன் சங்கிலியை பறித்துச்சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
பட்டுக்கோட்டை:-
பட்டுக்கோட்டையில் பெண்ணிடம் 5 பவுன் சங்கிலியை பறித்துச்சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
பொருட்கள் வாங்க சென்ற பெண்
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி பகுதியை சேர்ந்தவர் ராமர். இவர் அந்த பகுதியில் துணிக்கடை வைத்துள்ளார். இவருடைய மனைவி மகேஸ்வரி(வயது 33). இவருடைய தாயார் வீடு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை பெருமாள் கோவில் தெரு புது ரோடு பகுதியில் உள்ளது.
இந்த நிலையில் உறவுக்கார பெண் திருமணத்துக்காக மகேஸ்வரி பட்டுக்கோட்டை வந்திருந்தார். சம்பவத்தன்று பட்டுக்கோட்டை பகுதியில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு அறந்தாங்கி சாலை பகுதியில் மகேஸ்வரி நடந்து சென்று கொண்டிருந்தார்.
சங்கிலியுடன் மாயமான நபர்
அங்கு உள்ள பெட்ரோல் பங்க் அருகில் சென்றபோது எதிரில் நடந்து வந்த மர்ம நபர் ஒருவர் திடீரென மகேஸ்வரி கழுத்தில் இருந்த 5 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த மகேஸ்வரி, ‘திருடன், திருடன்’ என கூச்சல் போட்டார். ஆனால் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் வருவதற்குள் தங்க சங்கிலியுடன் அந்த மர்ம நபர் மாயமாகி விட்டார். இதுகுறித்து மகேஸ்வரி பட்டுக்கோட்டை நகர போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண்ணிடம் தங்கச்சங்கிலியை பறித்துச்சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வருகிறார்கள்.