தொடர்ந்து வெளியாகும் வினாத்தாள்கள்; கல்வி அதிகாரி பணியிடை நீக்கம்
திருப்புதல் தேர்வு வினாத்தாள் முன்கூட்டியே வெளியாகும் சம்பவம் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. இதுதொடர்பாக திருவண்ணாமலை கல்வி அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
திருவண்ணாமலை
திருப்புதல் தேர்வு வினாத்தாள் முன்கூட்டியே வெளியாகும் சம்பவம் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. இதுதொடர்பாக திருவண்ணாமலை கல்வி அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
வினாத்தாள் வெளியான விவகாரம்
10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நடந்து வரும் திருப்புதல் தேர்வின் வினாத்தாள்கள் முன்கூட்டியே வெளியாகும் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது.
இதற்கிடையே நேற்று முன்தினம் நடந்த தேர்வுகளுக்கான வினாத்தாள் அதற்கு முந்தைய நாளும், நேற்று நடந்த தேர்வுக்கான வினாத்தாள், நேற்று முன்தினமும் சமூக வலைதளங்களில் வெளியாகி வந்தது.
அவ்வாறு வெளியாகும் வினாத்தாளே மறுநாள் தேர்வுகளிலும் வழங்கப்படும் வினாத்தாளாகவே இருந்தது. இதனால் இந்த வினாத்தாள்களை சமூக வலைதளங்களில் கேட்டு பெற்று, மாணவ-மாணவிகள் போட்டி போட்டு பரப்பினர்.
அதன் தொடர்ச்சியாக, இன்று (புதன்கிழமை) நடைபெற உள்ள 12-ம் வகுப்பு இயற்பியல், பொருளியல் வினாத்தாள்களும், நேற்றே சமூகவலைதளங்களில் வெளியாகின. அதனையும் மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் கேட்டு வாங்கினர்.
ஏற்கனவே வெளியிட்டிருந்த அட்டவணைப்படி, இன்றுடன் திருப்புதல் தேர்வு நிறைவு பெற்றாலும், தேர்தல் பயிற்சி பணிக்காக கடந்த 10-ந்தேதி ஆசிரியர்கள் செல்லவேண்டி இருந்ததால், அன்றைய தினத்தில் நடந்த 10, 12-ம் வகுப்புகளுக்கான ஆங்கிலத்தேர்வு 17-ந்தேதிக்கு (நாளை) தள்ளிவைக்கப்பட்டது.
இதில் 10-ம் வகுப்புக்கான ஆங்கிலத்தேர்வு வினாத்தாளும் ஏற்கனவே வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. அந்தவகையில் முதல் திருப்புதல் தேர்வு நாளையுடன் (வியாழக்கிழமை) முடிவடைகிறது.
பணியிடை நீக்கம்
இதற்கிடையே வினாத்தாள்கள் திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்துதான் சமூகவலைதளங்கள் மூலம் பிற பகுதிகளுக்கு பரவியது என்ற விவரம் கல்வித்துறைக்கு தெரியவந்தது.
அதனைத்தொடர்ந்து கல்வித்துறை அதிகாரிகள் அடங்கிய குழு திருவண்ணாமலைக்கு சென்று விசாரணை நடத்தியது. இதில் திருவண்ணாமலை மாவட்டம் போளூர், வந்தவாசியில் உள்ள 2 தனியார் பள்ளிகளை சேர்ந்தவர்கள் வினாத்தாளை சமூக வலைதளங்களில் பரப்பியது கண்டுபிடிக்கப்பட்டு, அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது.
இந்தநிலையில் வினாத்தாளை சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு முன்கூட்டியே அனுப்பிய விவகாரம் தொடர்பாக, திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அருள்செல்வம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
நேற்று காலை திருவண்ணாமலை பஸ் நிலையம் அருகில் டவுன் ஹால் பள்ளியில் வாக்குச் சாவடி மையத்தை கலெக்டர் முருகேஷ் ஆய்வு செய்தார்.
அப்போது முதன்மை கல்வி அலுவலர் அருள்செல்வம் உடனிருந்தார். அவரது அலுவலகத்திற்கு சென்ற பின்னர் தான் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட தகவல் அவருக்கு கிடைத்து உள்ளது.
கூடுதல் பொறுப்பு
இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை சார்பில் நேற்று வெளியிடப்பட்ட உத்தரவில், ‘திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பணியிடத்துக்கு நிர்வாக நலன்கருதி, விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பணிபுரியும் கோ.கிருஷ்ணபிரியா என்பவரை முழு கூடுதல் பொறுப்பு அலுவலராக நியமனம் செய்து ஆணை வழங்கப்படுகிறது.
அப்பணியிடத்தில் மறு அலுவலர் பணியேற்கும் வரை கிருஷ்ணபிரியா முழு கூடுதல் பொறுப்பில் செயல்படுவார்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பணி ஓய்வு பெறுவதற்கு இன்னும் 3 மாதமே உள்ள நிலையில் அருள்செல்வம் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது பரபரப்ரபை ஏற்படுத்தி உள்ளது.
மதிப்பெண் கணக்கில் கொள்ளப்படாது
கொரோனா தொற்று சூழல் அதிகமாக இருந்து வந்த நேரத்தில், பொதுத்தேர்வை போல, திருப்புதல் தேர்வையும் நடத்த வேண்டும்.
மாணவர்கள் அந்த தேர்வில் பெறும் மதிப்பெண்களை கொண்டு பொதுத்தேர்வு காலத்தில் நோய் பாதிப்பு தீவிரமாக இருந்தால், திருப்புதல் தேர்வு மதிப்பெண்ணை கணக்கில் எடுத்துக்கொள்ள வாய்ப்பு இருப்பதாகவும் கல்வித்துறை தரப்பில் பேசப்பட்டது. இதன் காரணமாகவே இந்த திருப்புதல் தேர்வு வினாத்தாளுக்கு இவ்வளவு முக்கியம் இருந்தது.
இந்த நிலையில் திருப்புதல் தேர்வு வினாத்தாள் வெளியான சம்பவத்தை தொடர்ந்து, திருப்புதல் தேர்வு, பொதுத்தேர்வு மதிப்பெண் போல கணக்கில் கொள்ளப்படாது என்றும், பொதுத்தேர்வுக்கு மாணவர்கள் தயாராகுவதற்கு பயிற்சி எடுக்கும் தளமாகவே திருப்புதல் தேர்வுகள் இருக்கும் என்றும் கல்வித்துறை, பள்ளிகளுக்கு அறிவுறுத்தியிருப்பதாக தகவல்கள் நேற்று வெளியாகின.