அறுவடை செய்யப்பட்ட வயல்களில் வைக்கோல் நனைந்து நாசம்

கோட்டூர் பகுதியில் பெய்த திடீர் மழையால் அறுவடை செய்யப்பட்ட வயல்களில் வைக்கோல் நனைந்து நாசமடைந்தது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

Update: 2022-02-15 18:15 GMT
கோட்டூர் பிப்.16-
கோட்டூர் பகுதியில் பெய்த திடீர் மழையால் அறுவடை செய்யப்பட்ட வயல்களில் வைக்கோல் நனைந்து நாசமடைந்தது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். 
தொடர் மழை
திருவாரூர் மாவட்டம் கோட்டூர் பகுதியில் கடந்த 11, 12-ந் தேதிகளில் 2 நாள் தொடர் மழை பெய்தது. மற்ற நாள்களில் விட்டுவிட்டு மழை பெய்தது. இதனால் சம்பா மற்றும் தாளடி அறுவடை மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. மேலும் அறுவடை செய்த நெல்லை அரசு கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் ஆங்காங்கே சாலை ஓரங்களிலும் களத்து மேட்டிலும் கொட்டி பாதுகாத்து வந்தனர்.  
வைக்கோல் நனைந்து நாசம்
இந்த நெல்லும் மழையால் நனைந்தது. இதுவரை மாட்டுத் தீவனமாக அதிக அளவில் பயன்படும் வைக்கோல் திருச்சி, கரூர், புதுக்கோட்டை போன்ற பகுதிகளுக்கு டெல்டா மாவட்டங்களில் இருந்து தான் அனுப்பி வைக்கப்படும். 
 இந்த பகுதிகளிலும் தாங்கள் வளர்க்கும் கால்நடைகளுக்கு தேவையான வைக்கோலை  விவசாயிகள் சேமித்து வைத்துக்கொள்வார்கள். இந்த ஆண்டு அறுவடை செய்த நெல்லை விற்க முடியாமல் தவித்த போது அறுவடை செய்த வைக்கோலை அந்த வயலில் கிடந்தது. தற்போது திடீரென பெய்த மழையால் வயல்களில் தண்ணீர் தேங்கி வைக்கோல் அழுகி வருகிறது. 
விவசாயிகள் கவலை
 இதனால் விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறைந்தபட்சம் ஏக்கருக்கு 60 கட்டு வரை வைக்கோல் கிடைக்கும் என்றும் ஒரு கட்டு ரூ.50-க்கு விற்பனையாகும் என விவசாயிகள் கூறினர். திடீர் மழையால் ஏக்கருக்கு ரூ.3,000 வரை விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய உபரி வருமானம் பாதிக்கப்பட்டுள்ளது. கோட்டூர் பகுதியில் மட்டும் 10 ஆயிரம் எக்டேருக்கு மேல் நிலங்களில்  வைக்கோல் வீணாகிவிட்டது. இதனால் எதிர்காலத்தில் மாடுகளுக்கு தீவன தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது என்றும் விவசாயிகள் தெரிவித்தனர். இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். 

  

மேலும் செய்திகள்