பறக்கும் படை சோதனை: குமரியில் ஒரே நாளில் ரூ.2¼ லட்சம் பறிமுதல்
குமரியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில், ஒரே நாளில் ரூ.2¼ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
நாகர்கோவில்,
குமரியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில், ஒரே நாளில் ரூ.2¼ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
பறக்கும் படை சோதனை
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி, வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கு பரிசுகள் மற்றும் பணம் வினியோகிப்பதை தடுக்க குமரி மாவட்டத்தில் 75 பறக்கும் படைக்குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு நடந்து வருகிறது.
அதன்படி குளச்சல் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பறக்கும் படை அதிகாரிகள் நேற்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது குளச்சல் பஸ் நிலையம் பகுதி வழியாக வந்த கார் ஒன்றை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அதில் உரிய ஆவணங்களின்றி ரூ.60,400 இருந்தது. அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதேபோல் திற்பரப்பு பகுதிகளில் அதிகாரிகள் ரோந்து சென்றபோது, டெம்போ மற்றும் காரில் உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ.1 லட்சத்து 4 ஆயிரத்து 862 பறிமுதல் செய்யப்பட்டது.
ரூ.2¼ லட்சம் பறிமுதல்
தேர்தல் பறக்கும் படை அதிகாரி பிரேமலதா தலைமையில் அதிகாரிகள் மற்றும் போலீசார் நேற்று அதிகாலையில் வேர்க்கிளம்பி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக உரிய ஆவணங்கள் இன்றி மினி லாரியில் எடுத்து செல்லப்பட்ட ரூ.62 ஆயிரத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பணம் அனைத்தும் அதிகாரிகள் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
இதன் மூலம் நேற்று ஒரே நாளில் மட்டும் பறக்கும் படையினரால் ரூ.2,27,262 பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதையடுத்து குமரி மாவட்டத்தில் கடந்த 3-ந் தேதி முதல் பறக்கும் படை குழுக்களால் மொத்தம் ரூ.44 லட்சத்து 78 ஆயிரத்து 172 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.