சரண் அடைந்த போலீஸ் ஏட்டுவை 3 நாட்கள் விசாரிக்க கோர்ட்டு அனுமதி

போலீஸ் நிலையத்தில் கைதி இறந்த விவகாரம் தொடர்பாக சரண் அடைந்த போலீஸ் ஏட்டுவிடம் 3 நாட்கள் விசாரிக்க கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.

Update: 2022-02-15 18:03 GMT
ராமநாதபுரம்,

மதுரையை சேர்ந்தவர் ராமானுஜன் மகன் வெங்கடேசன் (வயது 26). திருட்டு வழக்கு தொடர்பாக கடந்த 2012-ம் ஆண்டு பரமக்குடி எமனேசுவரம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துவரப்பட்ட இவர் போலீசார் தாக்கியதில் இறந்ததாக புகார் கூறப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக அப்போதைய சப் - இன்ஸ்பெக்டர் முனியசாமி (65) உள்பட 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
 இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றப்பட்ட நிலையில் ஓய்வு பெற்ற முனியசாமியை கடந்த 2020-ம் ஆண்டு போலீசார் கைது செய்த நிலையில் இறந்தார். இந்த வழக்கில் போலீஸ் ஏட்டு ஞானசேகரன், தனிப்பிரிவு போலீஸ்காரர் கிருஷ்ணவேல் ஆகியோர் சரண் அடைந்துள்ளனர். இவர்கள் ஜாமீன் பெற்றுள்ளனர். இந்நிலையில் தலைமறைவாக இருந்து வந்த மற்றொரு போலீஸ் ஏட்டு கோதண்டராமன் சமீபத்தில் சரண் அடைந்தார்.
முதுகுளத்தூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவரை வழக்கு விசாரணைக்காக போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க ராமநாதபுரம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர்.இந்த மனு மீதான விசாரணை நேற்று ராமநாதபுரம் நீதித்துறை நடுவர் எண் 2 நீதிபதி பொறுப்பு விஜய்ஆனந்த் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி மேற்கண்ட கோதண்டராமனை 3 நாட்கள் (வரும் வெள்ளிக்கிழமை வரை) காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தார். இதைத்தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி போலீசார் அவரை அலுவலகத்திற்கு கொண்டு சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த விசாரணையில் எமனேசுவரம் காவல் நிலையத்தில் கைதி இறந்தது தொடர்பாக பல முக்கிய தகவல்களை பெற போலீசார் திட்டமிட்டுள்ளனர்.விரைவில் இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்