பிரதாபராமபுரத்தில், பொதுமக்கள் சாலை மறியல்

ஆடுகளை கடித்து குதறுவதால் நாய் பண்ணையை அகற்றக்கோரி பிரதாபராமபுரத்தில், பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 2½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2022-02-15 17:32 GMT
வேளாங்கண்ணி:
ஆடுகளை கடித்து குதறுவதால் நாய் பண்ணையை அகற்றக்கோரி பிரதாபராமபுரத்தில், பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 2½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நாய் பண்ணை
வேளாங்கண்ணி அருகே கீழையூர் ஒன்றியம் பிரதாபராமபுரம் ஊராட்சி செருதூரில் தனியார் ஒருவர் நாய் பண்ணை நடத்தி வருகிறார். இந்த பண்ணையில் சுமார் 250 நாய்கள் உள்ளதாக கூறப்படுகிறது.
 இங்கு வளர்க்கப்படும் நாய்கள் பண்ணையை விட்டு வெளியேறி அந்த பகுதியில் உள்ள வீடுகளில் வளர்க்கப்படும் ஆடுகளை கடித்து குதறி கொன்று விடுவதாகவும், பொதுமக்களை கடித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
சாலை மறியல்
இந்த பண்ணையை அகற்றுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. 
இந்த நிலையில் அந்த பகுதியில் 2 ஆடுகளை நாய் கடித்து கொன்றது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதி பொதுமக்கள், பிரதாபராமபுரத்தில் வேளாங்கண்ணி- திருத்துறைப்பூண்டி செல்லும் கடற்கரை சாலையில் நாய் கடித்து கொன்ற  ஆடுகளை வைத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நாய் பண்ணையை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
 போக்குவரத்து பாதிப்பு
 இதுகுறித்து தகவல் அறிந்த நாகை வருவாய் கோட்டாட்சியர் மணிவேலன், போலீஸ் துணை சூப்பிரண்டு சரவணன் ஆகியோர் நாய் பண்ணையை சென்று பார்வையிட்டனர். பின்னர் மறியலில் ஈடுபட்டவர்களுடன், பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஒரு வாரத்தில் நாய் பண்ணையை அப்புறப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். 
இதை தொடர்ந்து அவர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலைமறியல் போராட்டத்தால் வேளாங்கண்ணி - திருத்துறைப்பூண்டி செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் 2½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்