தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்டம்

திருவாரூரில், மார்ச் 15-ந் தேதி தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்டம் நடக்கிறது. இதையொட்டி குதிரை பொம்மைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Update: 2022-02-15 17:30 GMT
திருவாரூர்;
திருவாரூரில், மார்ச் 15-ந் தேதி தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்டம் நடக்கிறது. இதையொட்டி குதிரை பொம்மைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 
ஆழித்தேரோட்டம்
திருவாரூரில் பிரசித்தி பெற்ற தியாகராஜர் கோவில் உள்ளது. 
சர்வதோஷ பரிகார தலமாகவும், சைவ சமயத்தின் தலைமை பீடமாகும் இந்த கோவில் விளங்குகிறது. ஆசியாவிலே மிகப்பெரிய தேராக உள்ள ஆழித்தேரை பெற்ற சிறப்பு இந்த கோவிலுக்கு உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆழித்தேரோட்ட விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டு ஆழித்தேரோட்டம் அடுத்த மாதம் (மார்ச்) 15-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதையொட்டி அழித்தேரின் பிரமாண்டமான கண்ணாடி கூண்டு பிரிக்கப்பட்டு தேரை அலங்கரிக்கும் பணிகள் தொடங்கி உள்ளது. 
குதிரை பொம்மை
ஆழித்தேருடன் விநாயகர், சுப்பிரமணியர், கமலாம்பாள், சண்டிகேஸ்வரர் தேர்கள் அலங்கரிக்கும் பணி தொடங்கி உள்ளது.
பிரமாண்ட ஆழித்தேரின் முன்பு 4 குதிரைகள் கம்பீரமாக காட்சியளிக்கும். கடந்த ஆண்டு ஆழித்தேரோட்டத்தின் போது கீழவீதி தேரடியில் இருந்து புறப்பட்ட ஆழித்தேர், தெற்கு வீதியை அடைந்து திரும்பும் போது தேரின் முன்புறம் கட்டப்பட்ட குதிரை பொம்மைகள் மாடி கட்டிடத்தில் மோதி சேதமடைந்தது. இதனால் இந்த ஆண்டு குதிரை பொம்மைகள் புதிதாக அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்கான பணிகள் கடந்த மாதம் தொடங்கியது. இதற்காக மூங்கில் கொண்டு குதிரை பொம்மை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
தற்போது சுமார் 60 சதவீதம் பணிகள் முடிவுற்ற நிலையில் உள்ளது. மேலும் முழுமையாக தயாரிப்பு பணிகள் முடிவுற்று வண்ணம் பூசப்பட்டு குதிரை பொம்மை பிரமாண்டமாக தயாராகிறது.
---

மேலும் செய்திகள்