தேனி மாவட்டத்தில் 92 ரவுடிகள் கைது

தேனி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை அமைதியாக நடத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 92 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-02-15 17:03 GMT
தேனி: 

தேனி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை அமைதியாக நடத்தவும், மக்கள் அச்சமின்றி வாக்களிக்க ஏதுவாகவும் போலீஸ் துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே உத்தரவின்பேரில் பதற்றமான வாக்குச்சாவடிகள் அமைந்துள்ள பகுதிகளில் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டு வருகிறது.

ரவுடி பட்டியலில் இடம்பெற்றுள்ள நபர்களின் நடமாட்டத்தை போலீசார் கண்காணித்து வருகின்றனர். கடந்த கால தேர்தல்களின் போது பிரச்சினைகள் செய்து, ரவுடி பட்டியலில் இடம்பெற்றுள்ள நபர்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் கைது செய்து வருகின்றனர்.


அதன்படி தேனி மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 92 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் சம்பந்தப்பட்ட ஆர்.டி.ஓ. முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். அடுத்த 6 மாத காலத்துக்கு எந்தவித அசம்பாவித சம்பவங்களிலும் ஈடுபடக்கூடாது என நன்னடத்தை பத்திரம் எழுதி வாங்கிவிட்டு அவர்கள் விடுவிக்கப்பட்டனர். 

தொடர்ந்து அவர்களின் செயல்பாடுகளை போலீசார் கண்காணித்து வருகின்றனர். கொலை, அடிதடி வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நபர்கள் யாரேனும் ஜாமீனில் வெளியே வந்தால், அவர்களை கண்காணிக்க வேண்டும் என்றும், குறிப்பாக கூலிப்படையினருடன் தொடர்புடைய நபர்களை கண்காணிப்பு வளையத்தில் வைத்திருக்க வேண்டும் என்றும் தனிப்பிரிவு போலீசாருக்கு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்