மாசித்திருவிழாவையொட்டி பழனி மாரியம்மன் கோவிலில் திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் தரிசனம்
மாசித்திருவிழாவையொட்டி பழனி மாரியம்மன் கோவிலில் நேற்று இரவு அம்மனுக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பழனி:
பழனி கிழக்கு ரதவீதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் மாசித் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு மாசித்திருவிழா கடந்த மாதம் 28-ந்தேதி முகூர்த்தக்கால் நாட்டுதலுடன் தொடங்கியது. விழாவையொட்டி நேற்று இரவு திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக கோவில் முன்பு அமைக்கப்பட்டு இருந்த திருமண மேடையில் வைத்து அம்மனுக்கு 16 வகை அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து திருக்கம்பத்தை சிவனாக பாவித்து மலர்களாலும், அணிகலன்களாலும் அலங்கரிக்கப்பட்ட அம்மனுக்கு மங்கல நாண் அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கோவில் பட்டத்து குருக்கள் அமிர்தலிங்கம் மற்றும் குருக்கள் திருமண நிகழ்ச்சியை நடத்தினர். இதில் பழனி கோவில் உதவி ஆணையர் செந்தில்குமார், கண்காணிப்பாளர் முருகேசன் மற்றும்கோவில் அலுவலர்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
முன்னதாக ஏராளமான பக்தர்கள் தங்களது வேண்டுதல்கள் நிறைவேற தீர்த்தக்குடம் எடுத்தும், மாவிளக்கு எடுத்தும், அக்னிசட்டி எடுத்தும் வந்தனர்.
தேரோட்டம்
முக்கிய நிகழச்சியான தேரோட்டம் இன்று (புதன்கிழமை) மாலை நடைபெறுகிறது. நாளை மாரியம்மன் நீராடல் நிகழ்ச்சி, இரவு கொடிஇறக்குதலுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.