சிறுமிக்கு பாலியல் தொல்லை மாற்றுத்திறனாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாற்றுத்திறனாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஊட்டி கோர்ட்டு தீர்ப்பளித்தது.

Update: 2022-02-15 15:16 GMT
ஊட்டி

4½ வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாற்றுத்திறனாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஊட்டி கோர்ட்டு தீர்ப்பளித்தது.

சிறுமிக்கு பாலியல் தொல்லை

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள ஓவேலி பகுதியை சேர்ந்தவர் அப்பாஸ் (வயது 52), மாற்றுத்திறனாளி. திருமணமான இவர் கூலி வேலை செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் 10-ந் தேதி தெருவில் விளையாடிக்கொண்டு இருந்த 4½ வயது சிறுமியை தனியாக அறைக்கு அழைத்து சென்றார்.

பின்னர் அவர் அந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்தார். இதனால் அழுதபடி சென்ற அந்த சிறுமி இது குறித்து பெற்றோரிடம் கூறினாள். இது குறித்த புகாரின்பேரில் கூடலூர் அனைத்து மகளிர் போலீசார் அப்பாசை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். 

கோர்ட்டில் ஆஜர்

இது குறித்த வழக்கு ஊட்டி மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிந்ததை தொடர்ந்து  தீர்ப்பு கூறப்பட்டது. 

இதையடுத்து அப்பாஸ் கோர்ட்டில் ஆஜரானார். அதன்படி இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அப்பாசுக்கு, சிறுமியை கடத்தி சென்றதற்கு 10 ஆண்டுகள், அறையில் அடைத்து வைத்து துன்புறுத்தியதற்கு ஒரு ஆண்டு, 12 வயதுக்கு கீழ் உள்ள சிறுமிக்கு பாலியல் கொடுத்ததாக 2 பிரிவுகளுக்கு 20 மற்றும் 7 ஆண்டுகள் என மொத்தம் 38 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மாவட்ட முதன்மை நீதிபதி சஞ்சய் பாபா தீர்ப்பு கூறினார். 

அதுபோன்று 3 பிரிவுகளுக்கு தலா ரூ.1000 வீதம் ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்ததுடன், அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் 9 மாதம் சிறை தண்டனை வழங்கப்படும் என்றும், அப்பாசுக்கு வழங்கப் பட்டு உள்ள தண்டனையை அவர் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி கூறினார். 

20 ஆண்டு சிறை

இந்த வழக்கில் அளிக்கப்பட்ட தண்டனையை அப்பாஸ் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி கூறி உள்ளதால், இதில் அதிக பட்ச தண்டனையான 20 வருட சிறை தண்டனையை அவர் அனுபவிக்க வேண்டும். மேலும் இந்த வழக்கில் அரசு தரப்பில் போக்சோ சிறப்பு வக்கீல் செந்தில் ஆஜராகி வாதாடினார்.

மேலும் செய்திகள்