தோதகத்தி மரங்கள் வெட்டி கடத்தல் வனத்துறை அதிகாரிகள் விசாரணை
தோதகத்தி மரங்கள் வெட்டி கடத்தப்பட்டது குறித்து வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரும்பாறை:
பெரும்பாறை அருகே கொட்டலங்காடு என்ற மலைக்கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் மனைவி ஜெயலட்சுமி (வயது 64). இவருக்கு சொந்தமான தோட்டம் அப்பகுதியில் உள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வீசிய கஜா புயலில் அவரது தோட்டத்தில் இருந்த தோதகத்தி மரங்கள் சாய்ந்துவிட்டன. இருப்பினும் அவை வெட்டி அகற்றப்படாமல் அங்கேயே கிடந்தது. இந்தநிலையில் அந்த மரங்களை மர்மநபர்கள் வெட்டி கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஜெயலட்சுமி, தாண்டிக்குடி வனத்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தார். அதன்பேரில் வனச்சரகர் ஆறுமுகம், வனவர் அய்யனார்செல்வம், வனகாப்பாளர் பீட்டர்ராஜா ஆகியோர் கொட்டலங்காட்டில் விசாரணை நடத்தினர். அப்போது தோதகத்தி மரங்களை வெட்டி கடத்தியதை அவர்கள் உறுதி செய்தனர். பின்னர் இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி தாண்டிக்குடி போலீஸ் நிலையத்தில் ஜெயலட்சுமி புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், பொதுவாக வனப்பகுதியில் தோட்டங்கள் வைத்துள்ள விவசாயிகள், தங்களது தோட்டத்தில் உள்ள மரங்களை அனுமதி பெற்று வெட்டி கொள்ளலாம். சந்தனம், தேக்கு உள்ளிட்ட விலை உயர்ந்த மரங்களை வெட்ட அனுமதி இல்லை. அந்த வகையில் தோதகத்தி மரங்களை வெட்டுவதற்கும் தடை உள்ளது. இதற்கிடையே மரங்களை வெட்டி கடத்திய நபர்கள் குறித்து விசாரணை நடக்கிறது என்றனர்.