பங்குகள் விற்பனைக்கான நடவடிக்கையை கண்டித்து எல்.ஐ.சி. அதிகாரிகள், ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
சென்னை அண்ணாசாலை மண்டல அலுவலகம் முன்பு எல்.ஐ.சி. பங்குகள் விற்பனைக்கான நடவடிக்கையை கண்டித்து அதிகாரிகள், ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
சென்னை,
எல்.ஐ.சி. பங்கு விற்பனைக்கான நிறுவன தகவல் அறிக்கை (புராஸ்பெக்டஸ்) நேற்று முன்தினம் இந்திய பங்குச்சந்தை பத்திர மாற்று ஆணையத்தில் (செபி) எல்.ஐ.சி.யால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
‘செபி'யில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ‘புராஸ்பெக்டசில்’ 5 சதவீத பங்குகளை பங்கு விற்பனைக்கு கொண்டுவரப்போவதாக எல்.ஐ.சி. அறிவித்துள்ளது. ஏற்கனவே இதற்காக எல்.ஐ.சி.யின் மூலதன தளம் 6 ஆயிரத்து 300 கோடி ரூபாயாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதில் 5 சதவீதம் அதாவது ரூ.310 கோடி பெறுமான பங்குத்தொகை 31 கோடி பங்குகளாக விற்பனைக்கு வருகிறது. இது இந்தியாவின் மிகப்பெரிய பங்கு விற்பனையாக இருக்கும் என்ற பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எல்.ஐ.சி. முதல்நிலை அதிகாரிகள் சங்கம், தேசிய காப்பீட்டு களப் பணியாளர் கூட்டமைப்பு, அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம், எல்.ஐ.சி. ஊழியர் கூட்டமைப்பு ஆகிய அமைப்புகளை உள்ளடக்கிய கூட்டுப்போராட்ட குழு சார்பில் நேற்று நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. அதன்படி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து எல்.ஐ.சி. அலுவலகங்கள் முன்பாகவும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
சென்னை அண்ணாசாலை மண்டல அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் கூட்டுப்போராட்டக்குழுவின் தலைவர்கள் எஸ்.ரமேஷ்குமார், கே.சுவாமிநாதன், சுரேஷ், விஜயகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினர்.