ராசிபுரம் நகராட்சியில் மாமனார்கள் அலங்கரித்த தலைவர் இருக்கை யாருக்கு?-மருமகள்கள் இடையே கடும் போட்டி
ராசிபுரம் நகராட்சியில் மாமனார்கள் அலங்கரித்த தலைவர் இருக்கை யாருக்கு என்ற கேள்வி எழுந்துள்ளது. மருமகள்கள் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
சேலம், நாமக்கல் மாவட்டங்கள் ஒருங்கிணைந்த மாவட்டமாக இருந்த காலத்தில் சேலத்திற்கு அடுத்ததாக 1.10.1948-ல் முதல் நகராட்சியாக ராசிபுரம் நகராட்சி உருவானது. மாவட்டத்தில் மற்ற நகராட்சிகள் அதன்பிறகு தான் படிப்படியாக உருவானது.
ராசிபுரத்தில் பிரசித்தி பெற்ற கைலாசநாதர் கோவில், பொன் வரதராஜ பெருமாள் கோவில், நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில், ஆஞ்சநேயர் கோவில்கள், எல்லை மாரியம்மன் கோவில் போன்ற பிரசித்தி பெற்ற கோவில்கள் உள்ளன. ராசிபுரம் நகரத்தை பொறுத்த வரை பட்டு நெசவு வணிகம் பிரதானமாக இருந்து வருகிறது. மாநில அளவில் பிரபலமான கல்வி நிலையங்கள் நிறைந்த பகுதி என்பதால் ராசிபுரத்தை கல்வி நகரம் என்று அழைப்பதும் உண்டு. சுவையான நெய்க்கு பெயர் பெற்றது இந்த நகரம். பிரபல எழுத்தாளர் ஆர்.கே. நாராயணனின் பூர்வீகம் ராசிபுரம் என்பது இந்த நகருக்கு கூடுதல் சிறப்பு ஆகும்.
இந்த நகராட்சியில் கடந்த 1969-ம் ஆண்டில் இருந்து 2016-ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் 4 முறை தி.மு.க.வினரும், 2 முறை அ.தி.மு.க.வினரும் தலைவர்களாக இருந்து உள்ளனர். அ.தி.மு.க.வை சேர்ந்த ஆர்.வி.மகாலிங்கத்தின் மகன் எம்.பாலசுப்பிரமணியன் கடைசியாக நகர்மன்ற தலைவராக பதவி வகித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது நகராட்சியில் பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர் என்பதால், அதாவது ஆண்களை விட 1,645 பேர் அதிகமாக இருப்பதால், நகர்மன்ற தலைவர் பதவி முதல் முறையாக பெண்களுக்கு (பொதுப்பிரிவு) இட ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
மழைக்காலங்களில் பழைய பஸ் நிலையம் அருகே சாலையோரத்தில் உள்ள வீடுகளில் மழைநீருடன் சாக்கடை கழிவு நீரும் கலந்து விடுவதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே அந்த பகுதியில் சாக்கடை கழிவுநீர் கால்வாயை சீரமைக்க வேண்டும். சேலம் சாலையில் உள்ள ஏரியை தூர்வாரி ஆக்கிரமிப்பை அகற்றி, மழைநீர் தேங்கி நிற்க செய்ய வேண்டும். நகரில் பல இடங்களில் தார்சாலை போடப்பட்டு உள்ளது. இருந்தாலும் பெரும்பாலான தெருக்களில் உள்ள சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளது. அவற்றையெல்லாம் சீரமைக்க வேண்டும். நகரில் போக்குவரத்து நெரிசலை தீர்க்க ரிங்ரோடு அமைக்க வேண்டும். பயணிகள், பொதுமக்கள் வசதிக்காக புறநகர் பகுதியில் பஸ் நிலையம் அமைத்து தந்து நகர வளர்ச்சிக்கு உதவ வேண்டும். அதற்காக ராசிபுரம் நகர எல்லையை ஒட்டியுள்ள கிராமங்களை நகராட்சியுடன் இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியை மாவட்ட மருத்துவமனையாக தரம் உயர்த்தி உள்ளதால் விரைவில் மாவட்ட மருத்துவமனையாக செயல்பட அனைத்து நடவடிக்கைகளும் எடுக்க வேண்டும். இதேபோல் தெருநாய் தொல்லைக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
நகரில் குடிநீர் பிரச்சினை பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. குடிநீர் பிரச்சினையை தீர்க்க பல முயற்சி எடுக்கப்பட்டு வந்தாலும், ராசிபுரத்திற்கு என தனி குடிநீர் திட்டத்தை விரைவாக செயல்படுத்தி நிரந்தரமாக குடிநீர் பிரச்சினையை தீர்க்க வேண்டும். பழைய பஸ் நிலைய பகுதியில் உள்ள பாழடைந்த கட்டிடங்களை அப்புறப்படுத்தி அங்கே புதிய கட்டிடம் கட்டி நகராட்சிக்கு வருமானத்தை பெருக்க வழி வகை செய்ய வேண்டும். புதிய பஸ் நிலைய கட்டிடங்களை உடனடியாக சீரமைத்து தரவேண்டும். அதேபோல் தினசரி மார்க்கெட்டில் வாகனங்கள் நிறுத்தும் வகையில் கட்டிடம் கட்டித்தரவேண்டும். இவ்வாறு பல்வேறு கோரிக்கைகளை மக்கள் முன்வைத்துள்ள நிலையில், புதிதாக நகராட்சி பொறுப்புக்கு வரும் அரசியல் கட்சியினர் நிறைவேற்றி தருவார்கள் என்ற நம்பிக்கையுடன் பொதுமக்கள் காத்திருக்கின்றனர்.
வருகிற 19-ந் தேதி நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா, கம்யூனிஸ்டு, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், தே.மு.தி.க., பா.ம.க. மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் உள்பட 127 பேர் போட்டியிடுகின்றனர். முதன் முதலாக பெண் ஒருவர் நகர்மன்ற தலைவராக பொறுப்பு ஏற்க உள்ளதால் தி.மு.க., அ.தி.மு.க. இடையே கடும் போட்டி நிலவுகிறது.
தி.மு.க. சார்பில் தற்போதைய நகர செயலாளர் என்.ஆர்.சங்கர் மனைவி பேராசிரியை கவிதா போட்டியிடுகிறார். தி.மு.க. சார்பில் இவர்தான் தலைவர் வேட்பாளர் என்று அக்கட்சியினர் கூறி வருகின்றனர். என்.ஆர்.சங்கரின் தந்தை என்.ஆர்.ராமதாஸ் ஏற்கனவே நகராட்சி தலைவராக பதவி வகித்து உள்ளார்.
அதேபோல் அ.தி.மு.க. சார்பில் நகர செயலாளர் பாலசுப்பிரமணியின் மனைவி கவிதா போட்டியிடுகிறார். அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் கவிதா, தலைவர் வேட்பாளர் என்று அந்த கட்சியினர் கூறுகின்றனர். அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் கவிதாவின் மாமனார் ஆர்.வி.மகாலிங்கம், கணவர் எம்.பாலசுப்பிரமணியன் ஆகியோர் ஏற்கனவே நகர்மன்ற தலைவராக இருந்து உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தலைவர் வேட்பாளர் என்று கூறப்படும் 2 பெண் வேட்பாளர்களின் மாமனார்களும் ஏற்கனவே நகர்மன்ற தலைவராக இருந்துள்ளதால் அந்த இடத்தை பிடிப்பதில் மருமகள்கள் இடையே போட்டி கடுமையாக உள்ளது. இருவரும் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகின்றனர். எனவே எந்த மருமகள் மாமனாரின் இருக்கையை அலங்கரிக்க போகிறார் என்பது 22-ந் தேதி வாக்கு எண்ணிக்கை முடிவுக்கு பிறகு தெரிய வரும்.
====
இதுவரை இருந்த தலைவர்கள்
இந்த நகராட்சியின் முதல் தலைவராக பி.கண்ணைய நாயுடு (1949-52) பணியாற்றி உள்ளார். அதன்பிறகு வேலா செட்டியார் (1952-53), எம்.எஸ்.ஏ.ஜெயராமன் (1959-62), ஏ.சுப்பிரமணியம் (1962-64), ஆர்.பெரியண்ண கவுண்டர் (1964-69), கே.சி.பெரியசாமி (1969-75), எம்.எஸ்.எஸ்.ரத்தினம் (1986-91), டி.கணேசன் (1996-2001), ஆர்.வி.மகாலிங்கம் (2001-06), என்.ஆர்.ராமதாஸ் (2006-11), எம்.பாலசுப்பிரமணியன் (2011-16) ஆகியோர் நகர்மன்ற தலைவர்களாக பதவி வகித்துள்ளனர்.
====
வாக்காளர்கள் விவரம்
2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி ராசிபுரம் நகராட்சி பகுதியில் மொத்தம் 50 ஆயிரத்து 244 பேர் வசித்து வருகின்றனர். இவர்களில் 40 ஆயிரத்து 960 வாக்காளர்களாக உள்ளனர்.
ஆண் வாக்காளர்கள்- 19,657,
பெண் வாக்காளர்கள்- 21,302,
மூன்றாம் பாலினத்தவர் - 1
மொத்த வார்டுகள் -27.